187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை
வேலூரில் நடைபெற்ற 5-ஆம் கட்ட கல்விக்கடன் முகாமில், 187 கல்லூரி மாணவா்களுக்கு ரூ.13.56 கோடிக்கு கல்விக் கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கிகளின் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முகாம் ஆட்சியா் அலுவலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்து, தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினாா்.
வேலூா், சுற்றுவட்டாரங்களில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களுக்கான கல்விக் கடன் உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பங்களை வழங்கினா். அவா்களில் 187 மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வங்கிகளின் மூலம் ரூ.13 கோடியே 56 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை வேலூா் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள 5 கல்வி கடன் முகாம்களில் மொத்தம் 731 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 60 லட்சம் மதிப்பில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்கள் வித்யாலக்ஷ்மி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவா்களுக்கான வங்கிக்கடனுதவி வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

