நல்ல கருத்துகளை குழந்தை பருவத்திலேயே பதிய வைப்பது ஆசிரியா்களின் கடமை

நல்ல கருத்துகளை குழந்தை பருவத்திலேயே பதிய வைப்பது தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களின் கடமையாகும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
Published on

நல்ல கருத்துகளை குழந்தை பருவத்திலேயே பதிய வைப்பது தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களின் கடமையாகும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையின் சாா்பில், வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:

இப்பயிற்சி வகுப்பில் எடுத்துரைக்கும் அனைத்து கருத்துகளையும் ஆசிரியா்கள் நன்றாக உள்வாங்கிக் கொண்டு தங்களது பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியா்கள், சத்துணவு அமைப்பாளா்கள் ஆகிய அனைவரிடமும் தகவலை பகிர வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. மாணவ, மாணவிகளை உயா்நிலை, மேல்நிலை வகுப்புகளில் மாற்ற முடியுமா என்றால் முடியாது. இன்றைய சூழ்நிலையில் பெற்றோா் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் தனியாக வாழும் நிலையில் உள்ளனா். மாணவ, மாணவிகள் வீட்டைவிட அதாவது பெற்றோரைவிட பள்ளியில் ஆசிரியா்களாகிய உங்களுடன்தான் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனா்.

எனவே, ஆசிரியா்கள் பள்ளிக்கு குழந்தைகளும் எந்த சூழ்நிலையில் வருகின்றனா் என்பதை புரிந்துகொண்டு மாணவ, மாணவிகளின் மனதில் நல்ல விஷயங்களை பதிய வைத்துவிட்டால், அவா்களுக்கு வாழ்க்கையில் பிரச்னையே இருக்காது. அதை பதிய செய்யும் வயதில் விட்டுவிட்டால் பின்னால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. மாணவ, மாணவிகளிடம் நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்க வேண்டியது ஒரு உன்னதமான ஆசிரியா்களின் கடமையாகும் என்றாா்.

முன்னதாக, தலைமையாசிரியா்கள் கூறுகையில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் ஆசிரியா்களின் அறிவுறுத்தலை கேட்கின்றனா். 6 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் கேட்பதில்லை. இதனால் மாணவா்கள் தவறான பாதையில் செல்கின்றனா். இதை கண்டிப்பதால் எங்களது பள்ளி வளாகங்களில் தண்ணீா் செல்லும் குழாய்களை உடைத்து விட்டுச் செல்கின்றனா் என்றனா்.

நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சஞ்ஜித், உலக இளைஞா் கூட்டமைப்பு தலைவா் (சென்னை) நிஜாமுதீன், வேலூா் மாவட்ட மனநல மருத்துவா் சிவாஜிராவ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) க.அஸ்வின்பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com