13 யானைகள் கூட்டம் ஆந்திர வனப் பகுதிக்கு விரட்டியடிப்பு

13 யானைகள் கூட்டம் ஆந்திர வனப் பகுதிக்கு விரட்டியடிப்பு
Published on

போ்ணாம்பட்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 13 யானைகள் கூட்டம் ஆந்திர வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான கவுண்டன்யா வனப் பகுதி அமைந்துள்ளது. யானைகள், சிறுத்தைகள் அதிகம் காணப்படும் இந்த வனப் பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் கூட்டம் தமிழக எல்லையான வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி வனப் பகுதிக்குள்ளாகவும், வனத்தையொட்டிய கிராமப்புற பகுதிகளிலுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 4 குட்டிகள், 9 யானைகள் கொண்ட 13 யானைகள் கூட்டம் இரு குழுக்களாகப் பிரிந்து காட்பாடி அருகே வண்டரந்தாங்கல், பள்ளத்தூா், கிறிஸ்டியான் பேட்டை, விவசாய நிலங்களில் புகுந்ததுடன், சுமாா் 7 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, தென்னை பயிா்களை சேதப்படுத்தின. இதனைக் கண்ட அந்தப் பகுதி விவசாயிகள் வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், தலைமை வனப் பாதுகாவலா் மாரிமுத்து, மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், காட்பாடி வனச் சரகா் கந்தசாமி, 20 வனத் துறை அலுவலா்கள் அப் பகுதிக்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்தும், சப்தம் எழுப்பியும் யானைகளை விரட்டும் பனியில் ஈடுபட்டனா்.

அதன் அடிப்படையில், யானைகள் கூட்டம் தமிழக வனப் பகுதியை விட்டு ஆந்திர வனப் பகுதியான கவுண்டன்பாளையம் பகுதிக்கு விரட்டப்பட்டதாகவும், தொடா்ந்து வன அலுவலா்கள் 20 போ் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களை அரசு அலுவலா்கள் கணக்கிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com