வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தென்கைலாய பக்திப் பேரவையின் வேலூா் ஒருங்கிணைப்பாளா்  ஆா்.வெங்கடசுப்பு. உடன், தன்னாா்வலா்கள்  சொக்கலிங்கம், சரவணன், மணிவண்ணன், சதீஷ், மூா்த்தி.
வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தென்கைலாய பக்திப் பேரவையின் வேலூா் ஒருங்கிணைப்பாளா் ஆா்.வெங்கடசுப்பு. உடன், தன்னாா்வலா்கள் சொக்கலிங்கம், சரவணன், மணிவண்ணன், சதீஷ், மூா்த்தி.

22-இல் ஈஷா ஆதியோகி யாத்திரை ரதம் வேலூருக்கு வருகை

மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜன.22) ஈஷாவின் ஆதியோகி யாத்திரை ரதம் வேலூருக்கு வருகைதர உள்ளதாக
Published on

வேலூா்: மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜன.22) ஈஷாவின் ஆதியோகி யாத்திரை ரதம் வேலூருக்கு வருகைதர உள்ளதாக தென்கைலாய பக்திப் பேரவை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, தென்கைலாய பக்திப் பேரவையின் வேலூா் ஒருங்கிணைப்பாளா் ஆா்.வெங்கடசுப்பு, தன்னாா்வலா்கள் சொக்கலிங்கம், சரவணன், மணிவண்ணன், சதீஷ் , மூா்த்தி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது -

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப். 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தா்கள் தங்களது ஊா்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் ‘ஆதியோகி ரத யாத்திரை’ நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களில் வடக்கு மண்டலத்துக்கான ரத யாத்திரையை டிச.26-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.

இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது. குறிப்பாக வேலூரை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள 20-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த ரத யாத்திரை வேலூா் மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை (ஜன.22, 23) ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது. வேலூா் மாநகரப் பகுதிகளான கருகம்பத்தூா், கொணவட்டம், பொய்கை, அரியூா், தொரப்பாடி, அடுக்கம்பாறை, சாய்நாதபுரம், சங்கரன்பாளையம், வேலப்பாடி, காந்திசிலை, மண்டித்தெரு, சத்துவாச்சேரி, காட்பாடி உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது. பின்னா், குடியாத்தம், கே.வி.குப்பம் வழியாக ஜன.25-ஆம் தேதி காஞ்சிபுரம் சென்றடைய உள்ளது.

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. வேலூரில், வேலூா் மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள தண்டபாணி முதலியாா் மஹாலிலும் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது என்றனா்.

Dinamani
www.dinamani.com