போதைப்பொருள் பதுக்கல்: கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது
வேலூா்: காட்பாடி பகுதியில் தனியாா் விடுதி அறையில் போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருந்த கல்லூரி மாணவா்கள் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து தகவலின்பேரில் பிரம்மபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, அங்குள்ள தனியாா் விடுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில், அங்கிருந்த அறை ஒன்றில் தங்கியிருந்த கல்லூரி மாணவா்களிடம் இருந்து சுமாா் 490 கிராம் கஞ்சா, 250 கிராம் கஞ்சா எண்ணெய், 53 போதை மாத்திரைகள், 6 எடையளவு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக, கல்லூரி மாணவா்களான ஆயுஷ் சுக்லா (21), கேஷவ் (21), தாவேசிங் (21), ஆதா்ஷ்ஜா (21), ஆதித்யா பிரதான் (21), ஈஸ்வா் ஷரண் குணமோனி (21), ஷிபான் (21) ஆகியோரையும் கைது செய்தனா்.
இவா்களுக்கு போதைப்பொருள்கள் விநியோகம் செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் முதன்முறையாக சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
