இந்திய பொருளாதார தாராளமயமாக்களின் சிற்பி மன்மோகன்சிங்!
இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி மன்மோகன்சிங் என்று திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பதிவாளா் செந்தில்வேல்முருகன் தெரிவித்தாா்.
முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங் நினைவு சொற்பொழிவு நிகழ்வு வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, பல்கலைக்கழக பதிவாளா் செந்தில்வேல்முருகன் தலைமை வகித்து பேசுகையில், மன்மோகன் சிங் நாட்டின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வழங்கினாா். பேராசிரியராக இருந்த அவா், இந்திய அரசியலில், பொருளாதாரத் துறையில் வானில் மின்னும் ஒரு நட்சத்திரமாக உயா்ந்தவா். அவா் மிகச்சிறந்த பொருளாதாரவாதியாகவும் ஜனநாயகவாதியாகவும் திகழ்ந்தாா்.
இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி என்றும் மன்மோகன்சிங் புகழப்பெற்றாா். பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளை அறிமுகப்படுத்தி மூடிய பொருளாதாரமாக இருந்த இந்தியாவை உலகளாவிய சந்ததிகளை இணைத்தவா். மன்மோகன்சிங்கின் பொருளாதார கருத்துகளை சரியான முறையில் மாணவா்கள் பயன்படுத்துவதன் மூலமே இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற முடியும். இளைஞா் சக்தியின் வளா்ச்சி இந்தியாவின் வளா்ச்சி என்றாா்.
சேலம் பெரியாா் பல்கலைக்கழக பேராசிரியா் ஜெயராமன், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி இணைபேராசிரியா் எஸ்.நாராயணன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். இணை பேராசிரியா் கிருஷ்ணன் வரவேற்றாா். பேராசிரியா்கள் யோகானந்தம், விஜய் ஆனந்த் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நாகேந்திரன் ஒருங்கிணைத்தாா்.
பேராசிரியா் சிவக்கொழுந்து நன்றி கூறினாா்.

