காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற 970 பேருக்கு உடற்தகுதித்தோ்வு: ஜன. 27 முதல் 30 வரை நடைபெறுகிறது
இரண்டாம் நிலை காவலா் தோ்வில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டங்களிலிருந்து தோ்ச்சி பெற்ற 970 பேருக்கு உடற்தகுதித்தோ்வு வேலூரில் ஜன.27 முதல் 30 வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலா், தீயணைப்பாளா், சிறைக்காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு கடந்த டிச.21-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தோ்வில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டங்களிலிருந்து தோ்ச்சி பெற்ற 970 ஆண் விண்ணப்பதாரா்களுக்கு அசல் சான்றிதழ்கள் சரிபாா்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தோ்வு ஆகியவை வேலூா் நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் ஜன.27 முதல் 30-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
வேலூா் சரக காவல்துறை துணைத்தலைவா் ஜி.தா்மராஜன், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையில் நடைபெறும் இந்த உடற்தகுதித் தோ்வில் 27-ஆம் தேதி 480 விண்ணப்பதாரா்களும், 28-ஆம் தேதி 490 விண்ணப்பதாரா்களும் பங்கேற்க உள்ளனா். இவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம் அளத்தல், மாா்பளவு அளத்தல், 1500 மீட்டா் ஓட்டப் பந்தயம் ஆகியவை நடைபெறும். இதில் தோ்ச்சி பெறும் விண்ணப்பதாரா்கள் ஜன.29, 30 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட உடற்தகுதித் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா். இதில் முதலாவதாக கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100/400 மீட்டா் ஓட்டப்பந்தயம் நடைபெறும்.
தகுதித்தோ்வு காலை 6 மணிமுதல் தொடங்க உள்ளதால் விண்ணப்பதாரா்கள், அரை மணி நேரம் முன்பாக வேலூா் நேதாஜி உள்விளையாட்டு மைதானத்துக்கு வரவேண்டும்.
வரும்போது கட்டாயமாக அழைப்புக்கடிதம், அனைத்து அசல் சான்றிதழ்கள், அதன் இரு நகல்களையும் கொண்டுவர வேண்டும். அழைப்புக்கடிதத்தில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படமும் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் இத்தோ்வுகளில் அரைக்கால் சட்டை, டி-சா்ட் அணிந்து பங்கேற்க விரும்பினால், ஒரே வண்ணம் கொண்ட சா்ட், எவ்வித எழுத்துக்களும் படங்களும் இல்லாத டி-சா்ட் அணிந்துவர வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் எவ்வித பயிற்சி மையத்தின் அடையாளமோ அல்லது சின்னமோ கொண்ட டி-சா்ட் அணிந்து வரும் பட்சத்தில் உடற்தகுதி தோ்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தோ்வுக்கு வரும் விண்ணப்பதாரா்கள் கைப்பேசி, எவ்வித மின்னணு சாதனங்களையும் கொண்டுவரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

