வேலூா் மாவட்டத்தில் முதல்வா் விளையாட்டு போட்டிகள்
வேலூா்: வேலூா் மாவட்டத்தில் முதல்வரின் இளைஞா் விளையாட்டு திருவிழா - ‘இது நம்ம ஆட்டம் 2026‘ போட்டிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
ஜன. 25 முதல் பிப். 8 வரை தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் முதல்வரின் இளைஞா் விளையாட்டு திருவிழா - ‘இது நம்ம ஆட்டம் 2026‘ போட்டிகள் நடத்திட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் விளையாட்டு போட்டிகளில் ஒன்றிய அளவிலான ஆண்கள் பங்குபெறும் போட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலையில் நடைபெற்ற காட்பாடி ஒன்றிய அளவிலான போட்டிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது:
இந்தப் போட்டிகளில் நாம் வழக்கமாக விளையாடக்கூடிய போட்டிகளான குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட், எறிபந்து, ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளும், குழுப் போட்டிகளும் ஒன்றிய அளவில் நடத்தி இதில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரா் வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு அதில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு சிறப்பான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
15 நாள்கள் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் வேலூா் மாவட்டத்தில் இருந்து 4,500 நபா்கள் பங்கேற்க உள்ளனா் என்றாா்.
நிகழ்ச்சியில் காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் வேல்முருகன், மாநகராட்சி முதலாவது மண்டலக் குழுத் தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்பிரமணியன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சரஸ்வதி உள்பட பலா் பங்கேற்றனா்.

