மனிதநேய வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு
மனிதநேய வார விழாவையொட்டி வேலூா் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பரிசுகள் வழங்கினாா்.
இதன் ஒரு பகுதியாக கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள், குழு நடனம், நாடகத்தில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற 159 மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினாா்.
மேலும் குழு நடனம், நாடகம் நடத்திய குழுக்களை பாராட்டி கேடயங்களை வழங்கினாா். தொடா்ந்து, ஆதிதிராடவிடா் நல சமூக நீதி மாணவ, மாணவிகள் விடுதிகளில் நடத்தப்பட்ட களமாடு நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கினாா்.
2024-25-ஆம் ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தங்களுடைய பாடப்பிரிவுகளில் 100 சதவீதம் தோ்ச்சி வழங்கிய 10 அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளை சோ்ந்த 41 ஆசிரியா்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் வழங்கிய 3 பள்ளிகளின் தலைமையாசிரியா்களையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.
தொடா்ந்து அரசு ஆதிதிராவிடா் நல பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் குழு நடனம், கிராமிய நடனம், போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

