இடப் பற்றாக்குறையால் தடுமாறும் நூலகம்!

கோபி, நவ.22:  ஒரு நூலகக் கதவு திறக்கப்படும் போதெல்லாம் ஒரு சிறைச்சாலைக் கதவு மூடப்படுகிறது என்பது நூலகங்களின் பெருமையை உணர்த்தும் பொன் மொழி.   ஆனால் புத்தகங்கள் பல இருந்தும், இடப்பற்றாக்குறை இருந்தால்

கோபி, நவ.22:  ஒரு நூலகக் கதவு திறக்கப்படும் போதெல்லாம் ஒரு சிறைச்சாலைக் கதவு மூடப்படுகிறது என்பது நூலகங்களின் பெருமையை உணர்த்தும் பொன் மொழி.

  ஆனால் புத்தகங்கள் பல இருந்தும், இடப்பற்றாக்குறை இருந்தால், எந்த நூலகமும் அதன் பயனை முழுமையாக வாசகர்களுக்குத் தந்து விட முடியாது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது கோபிசெட்டிபாளையம் நூலகம்.

  தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை ஈரோடு மாவட்ட நூலக ஆணைக் குழு கிளை நூலகம்-1 ஆக 1956-ல் கோபிசெட்டிபாளையத்தில் நூலகம் துவக்கப்பட்டது. மாவட்டத்தில் சிறந்த நூலகமாக விளங்கினாலும், ரூ.30 லட்சம் மதிப்பில் 72 ஆயிரம் புத்தகங்கள் இருந்தாலும், இடப்பற்றாக்குறை காரணமாக பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பிரிவு என பிரித்து புத்தகங்களை அடுக்கி வைக்க முடியவில்லை.

  கல்கத்தா ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை சார்பாக கோபி நூலகத்தில் குழந்தைகள் பிரிவுக்காக ரூ.7 லட்சம் கடந்த வருடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இங்கு குழந்தைகளுக்கென தனிப் பிரிவு இல்லாததால் அந்த நிதி வேறு பக்கம் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  முன்பு இடிந்த நிலையில் உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த நூலகம், 2000-ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. தற்போது புத்தகங்களை முறையாக அடுக்கி வைக்க இடமில்லாததால் பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

கிடப்பில் போடப்பட்ட

நகர் மன்றத் தீர்மானம்

  2007-ம் ஆண்டு பொதுமக்களின் நலன் கருதி கோபி நகராட்சி பூங்காவில் இயங்கி வரும் அரசு பொது நூலகத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்தவும், விஸ்தரிப்பு செய்யவும் 278.15 ச.மீ. பரப்பு நிலத்தை ஒதுக்கித் தருமாறும், பூங்கா நிலத்தில் கட்டுமானம் அமைப்பதற்கு சட்டப்படி அரசின் ஒப்புதல் கோரியும் கோபி நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

  இதை வழங்க தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு முறை அரசு செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதை அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

  நூலகத்திற்கு என தனி சாப்ட்வேர் உள்ளது. கம்ப்யூட்டர் இருந்தும் சாப்ட்வேர் தராத காரணத்தினால் இன்றுவரை புத்தகங்கள் எண்ணிக்கை மற்றும் எடுத்துச் செல்பவர்களின் விவரங்கள் அனைத்தையும், கையால் எழுதியே முறைப்படுத்தி வருகிறார்கள்.

  வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியும் இல்லை. மின் தடை காலத்தில் இங்கு ஜெனரேட்டர் வசதியில்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் நூலகத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

  ஜெராக்ஸ் மிஷின், இண்டர்நெட் பிரவுசிங் வசதியுடன் 4 கம்ப்யூட்டர்கள் இயங்குகிறது. மணிக்கு ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. 1999-ம் ஆண்டு 5,255 பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். தற்போது 8,800 பேர் உள்ளனர். ரூ.15 லட்சம் மதிப்பில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் படிப்புக்குத் தேவையான புத்தகங்கள் உள்ளன.

  இதை பாதுகாப்பதற்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் பாதுகாவலர் இல்லாததும் பெரிய குறைதான்.

  நகராட்சியில் ஆண்டுதோறும் வசூலிக்கும் வீட்டு வரியில் 10 சதவீதம் நூலக வரியாக வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.15 லட்சம் வருமானம் வருகிறது.

  நூலகத்தை விரிவுபடுத்த அரசு இடம் கொடுத்தால் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து பணம் பெற்று கட்டடம் கட்டிக் கொள்வது சாத்தியம்.

  மக்களின் அறிவுக் கண் திறக்க மனது வைக்குமா அரசு?.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com