கோரா பட்டு தயாரிப்பில் நம்பியூர் நெசவாளர்கள்

  கோபி, அக். 19: ஈரோடு மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தீபாவளிப் பண்டிகைக்காக கோரா பட்டு சேலைகளை நம்பியூர் நெசவாளர்கள் தயாரித்துள்ளனர்.  ஈரோடு மாவட்டத்துக்கு மஞ்சள், ஜவுளி என

  கோபி, அக். 19: ஈரோடு மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தீபாவளிப் பண்டிகைக்காக கோரா பட்டு சேலைகளை நம்பியூர் நெசவாளர்கள் தயாரித்துள்ளனர்.

 ஈரோடு மாவட்டத்துக்கு மஞ்சள், ஜவுளி எனப் பல பெருமைகள் உண்டு. விவசாய மாவட்டமான இங்கு வேளாண்மைக்கு அடுத்தபடியாக நெசவுத்தொழில் முக்கியமானதாக உள்ளது.

 ஈரோட்டுக்கு ஜவுளி, சென்னிமலைக்கு பெட்ஷீட், பவானிக்கு ஜமக்காளம் என்பது போல நம்பியூருக்கு கோரா பட்டு என்ற பெருமையை நம்பியூர் அருகே உள்ள சாவக்கட்டுப்பாளையம் கிராம நெசவாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.

 சாவக்கட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. சுமார் 5 ஆயிரம் தறிகள் உள்ளன. காலம் காலமாக கைத்தறி மூலம் பருத்திச் சேலைகளை நெய்து வந்த சாவக்கட்டுப்பாளையம் நெசவாளர்கள் தற்போது காஞ்சிபுரம் பட்டு சேலைகளையும் உற்பத்தி செய்து வருகின்றனர்.

 சாவக்கட்டுப்பாளையம் கிராமம் நம்பியூர் அருகே இருந்தாலும், இக்கிராமத்தின் பரந்து விரிந்த பகுதிகள் ஈரோடு மட்டுமின்றி திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளன. எம்மாம்பூண்டி, பொலவபாளையம், தத்தனூர் என 3 ஊராட்சிகளில் சாவக்கட்டுப்பாளையம் கிராமம் அடஙகி உள்ளது.

 பட்டுநூல் முறுக்கேற்றுவது, ராட்டையில் சுற்றுவது, பாவு விடுவது என்று 5-க்கும் மேற்பட்ட படிநிலைகளைக் கடந்துதான் தறிக்கு வருகிறது பட்டுச்சேலை. மெல்லிய நூலிழைகளை ஊடைக்குள் விட்டு, கால் மிதிப்பையும், கை இழுப்பையும் ஒரே நேரத்தில் நகர்த்தி, நூல்களோடு நூல்களை ஒட்ட வைத்து கண்கவரும் சேலைகளை உற்பத்தி செய்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

 தற்போது சாவக்கட்டுப்பாளையம் கிராம மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகைக்காக கோராப்பட்டு உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

 இதுவரை சுமார் 30 ஆயிரம் பட்டுச் சேலைகள் தயாரிக்கப்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இது தவிர ஆந்திரம், மராட்டியம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

 இது குறித்து நெசவாளர் ஒருவர் கூறுகையில், கடந்த காலத்தில் பருத்தி சேலை உற்பத்திதான் இருக்கும். காக்-டெக்ஸ் கூட்டுறவு சங்கம், டு காக்-டெக்ஸ் கூட்டுறவு சங்கம் என 2 சங்கங்கள் அப்போது இருந்தன. காக்-டெக்ஸ் சங்கம் தொடங்கி 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. டு காக்-டெக்ஸ் சங்கம் 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றது.

 தற்போது திருப்பூர் மாவட்டத்தில் நேதாஜி சொசைட்டி, தந்தை பெரியார் சொசைட்டி, அறிஞர் அண்ணா சொசைட்டி, அய்யன் திருவள்ளுவர் சொசைட்டி ஆகியவை தொடங்கப்பட்டு உள்ளன. இந்த 6 சொசைட்டிகளின் உறுப்பினர்களாக இங்குள்ள நெசவாளர்கள் உள்ளனர்.

 பருத்திச் சேலையின் தேவை குறைந்து வருவதால், தற்போது சீனா பட்டு, எம்போஸ் போன்ற கம்ப்யூட்டர் டிசைனிங் சேலைகளையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யும் கோரா பட்டு சேலைகள் ரூ.  400-ல் இருந்து ரூ.  10000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் இங்கு நெசவு செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com