மேட்டுப்பாளையத்தில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழக கோயில், திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது
மேட்டுப்பாளையத்தில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழக கோயில், திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2003ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள கோயில் யானைகள், திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தெப்பக்காட்டில் 4 யானைகள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு யானைகளை மலைப்பாதை வழியாக கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் தெப்பக்காடு பகுதியில் காட்டுயானைகள் தொந்தரவு அதிகளவில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக கோவை மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சியில் முகாம் நடத்த அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதையடுத்து கடந்த 2011-18ம் ஆண்டு வரை 8 முகாம்கள் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடைபெற்றது. தொடர்ந்து இந்துசமய அறநிலயத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 2019-20ம் ஆண்டுக்கான 13வது யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 48 நாட்கள் நடைபெற உள்ள இம்முகாமில் தமிழக கோயில்களுக்கு சொந்தமான 21 யானைகள், திருமடங்களுக்குச் சொந்தமான 5 யானைகள், புதுவை மாநில திருக்கோயில்களுக்குச் சொந்தமான 2 யானைகள் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்கின்றன. இதுவரை இம்முகாமிற்கு புதுச்சேரி யூனியன் பிரதேசம் பகுதியை சேர்ந்த திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேவஸ்தானம் யானை பிருக்ருதி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி தவிர தமிழக கோயில், திருமடங்களை சேர்ந்த 26 யானைகள் வந்துள்ளன.

முகாமில் யானைகளுக்கு கால்நடை மருத்தவர்களின் ஆலோசனைப்படி பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூர்ணம், பயோபூஸ்ட் உள்ளிட்ட 13 வகை உணவுகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் காலை, மாலை இருவேளையும் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட உள்ளது. யானைகள் நீர் தெளிப்பான்கள் மூலம் ஆனந்த குளியலாட ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமை இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளரும், ஆணைருமான க.பணிந்திரரெட்டி தொடங்கி வைத்தார். இவருடன் கோவை இணை ஆணையர் ராஜமாணிக்கம், சென்னை தலைமை இணை ஆணையர் கோ.செ.மங்கயைர்க்கரசி, சுகாதார இணை இயக்குநர் கிருஷ்ணா, கால்நடை மருத்துவத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி, மாவட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com