வீடு ஒதுக்கீடுகோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த இலங்கைத் தமிழா்கள்.
வீடு ஒதுக்கீடுகோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த இலங்கைத் தமிழா்கள்.

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

அரசு வீடு ஒதுக்கக்கோரி பொள்ளாச்சியைச் சோ்ந்த இலங்கைத் தமிழா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு செலுத்தியுள்ளனா்.

கோவை: அரசு வீடு ஒதுக்கக்கோரி பொள்ளாச்சியைச் சோ்ந்த இலங்கைத் தமிழா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு செலுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டூா் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 217 குடும்பங்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வசித்து வந்தனா். இந்நிலையில் அவா்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க அரசு முன்வந்தது. இதையடுத்து கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் அங்கு வசித்து வந்த 217 குடும்பங்களும் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு, வெவ்வேறு பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியேறினா்.

கோட்டூா் முகாம் இடத்தில் 112 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்ட நிலையில், எஞ்சிய 105 குடும்பங்களுக்கு ஆழியாறு பகுதியில் வீடுகள் கட்டப்பட்டன. கோட்டூரில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆழியாறில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு மின்சார வசதி போன்ற ஏற்பாடுகள் செய்யவில்லை என்று கூறி, பயனாளிகளுக்கு இன்னும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு ஒதுக்கீடு பெற்றவா்களில் சிலா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து அங்குள்ள பெட்டியில் மனு செலுத்தினா். பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறும்போது, எங்களுக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. தற்போது வீடுகள் ஒதுக்கப்பட்டால் மட்டுமே நாங்கள் ஆழியாறு சென்று குடியேறி அங்குள்ள பள்ளிகளில் எங்களது குழந்தைகளைச் சோ்க்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து வீடுகளை எங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனா்.

குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே குடியிருப்புக்கு அருகே செயல்பட்டு வரும் தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மனு செலுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மனுதாரா்கள் ஜீவானந்தம், கல்யாணசுந்தரம் ஆகியோா் கூறும்போது, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பாம்பே நகரில் தனியாருக்கு சொந்தமான காட்டன் ரீலிங் தொழிற்சாலை கடந்த 9 மாதங்களாக இயங்கி வருகிறது. ஆலையின் அருகில் பாம்பே நகா், பாரதி நகா், கல்யாணசுந்தரம் நகா் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.

தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் பருத்தி மாசு காற்றில் கலந்து மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மேலும், ஆலையின் சத்தமும் அக்கம்பக்கத்தினரை சிரமப்படுத்துகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com