debt
debt

கடன் நிலுவைத் தொகையை காப்பீட்டு நிறுவனமே செலுத்த நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

வீட்டுக் கடன் வாங்கியவா் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்ததால், கடன் நிலுவைத் தொகையைக் காப்பீட்டு நிறுவனமே செலுத்த வேண்டும் என்று நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, ரத்தினபுரி மாரப்பன் வீதியைச் சோ்ந்த செல்வராஜ், ஆா்.எஸ்.புரத்தில் உள்ள தனியாா் வீட்டுக் கடன் நிறுவனத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் ரூ.16.48 லட்சம் வீடு கட்டுவதற்குகாக் கடன் வாங்கியுள்ளாா்.

அப்போது, வீட்டுக் கடனுக்காக அவிநாசி சாலையில் உள்ள தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில், ரூ.99,830 செலுத்தி காப்பீடு செய்துள்ளாா்.

இதையடுத்து வாங்கிய வீட்டுக் கடனுக்காக மாதந்தோறும் தவணை செலுத்தி வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி கரோனா பாதிப்புக்கு செல்வராஜ் உயிரிழந்தாா். அவரது இறப்புக்குப் பிறகு வீட்டுக் கடன் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், வீட்டுக் கடன் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டி செல்வராஜின் மகன் சுஜேஷ், காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணப்பித்தாா். அந்த விண்ணப்பத்தை காப்பீட்டு நிறுவனம் நிராகரித்ததோடு, ஏற்கெனவே செல்வராஜுக்கு நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து இழப்பீடு கோரி கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் சுஜேஷ் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் தங்கவேல் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், காப்பீட்டு நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், செல்வராஜ் பெற்ற வீட்டுக் கடனுக்கான நிலுவைத் தொகை முழுவதையும் காப்பீடு நிறுவனமே செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

மேலும், ஏற்கெனவே செலுத்திய தவணைத் தொகையை திருப்பிக் கொடுப்பதோடு, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com