அன்னூர், கிணத்துக்கடவு புதிய வட்டம் தொடக்கம்

கோவை மாவட்டத்தில் அன்னூர், கிணத்துக்கடவு புதிய வட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் அன்னூர், கிணத்துக்கடவு புதிய வட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
 பொள்ளாச்சி வட்டத்தைப் பிரித்து கிணத்துக்கடவு வட்டமும், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் 8 வருவாய் கிராமத்தை இணைத்து புதியதாக அன்னூர் வட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
 கிணத்துக்கடவு வட்டம்: கிணத்துக்கடவு வட்டத்தை உருவாக்க, பல்வேறு நிலைகளில் 19 பணியிடங்கள் தவிர, புதிய அலுவலக வளாகம், குடியிருப்பு மற்றும் இதர தளவாடங்கள் உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.2.41 கோடிக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டது.
 பொள்ளாச்சி வட்டத்தினை பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு என இரண்டு வட்டங்களாகப் பிரித்து, பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 11 உள்வட்டங்களில் இருந்து 9 கிராமங்களை உள்ளடக்கிய வடசித்தூர் உள்வட்டம், 12 கிராமங்களை உள்ளடக்கிய கிணத்துக்கடவு உள்வட்டம் மற்றும் 14 கிராமங்களை உள்ளடக்கிய கோவில்பாளையம் உள்வட்டம் ஆகியவைகளைப் பிரித்து கிணத்துக்கடவு வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 299 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட கிணத்துக்கடவு வட்டத்தில் 35 கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவர். கிணத்துக்கடவில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் கலந்து கொண்டார். வருவாய்த் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
 பொள்ளாச்சி எம்எல்ஏ எம்.கே.முத்துக்கருப்பண்ணசாமி, சார் ஆட்சியர் ரஞ்சனா, கிணத்துக்கடவு ஒன்றியக் குழுத் தலைவர் தாமரைதுரை, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் குழுத் தலைவர் செல்வி பத்மினி, கிணத்துக்கடவு ஒன்றியக் குழு துணைத் தலைவர் கே.ஏ.ஏகநாதமூர்த்தி, கிணத்துக்கடவு வட்டாட்சியர் ஆர்.சாந்தாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
 அன்னூர் வட்டம்: அன்னூர் புதிய வட்டத்தை உருவாக்க பல்வேறு நிலைகளில் 26 பணியிடங்கள் தவிர அலுவலக வளாகம், குடியிருப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக முதல்வர் ரூ.2.41 கோடிக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கினார்.
 பொதுமக்களின் நலன்கருதி அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 வருவாய் கிராமங்களுடன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எட்டு வருவாய் கிராமங்களைச் சேர்த்து மொத்தம் 30 வருவாய் கிராமங்கள் அடங்கிய புதிய அன்னூர் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 சுமார் 389 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட அன்னூர் வட்டத்தில் 30 கிராமங்களைச் சேர்ந்த 1.74 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். அன்னூரில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம், அவிநாசி எம்எல்ஏ அ.அ.கருப்புசாமி, அன்னூர் ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணம்மாள் காளியப்பன், அன்னூர் வட்டாட்சியர் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com