கௌசிகா நதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

கௌசிகா நதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கௌசிகா நதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி அளித்த மனு:

மேற்குத் தொடர்ச்சி மலை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள குருடி மலையில் இருந்து உற்பத்தியாகும் கௌசிகா நதி கிழக்கு நோக்கிப் பயணித்து பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், அன்னூர், திருப்பூர் ஆகிய ஒன்றியங்களின் வழியாகக் கடந்து நொய்யல் நதியில் கலக்கிறது. எனவே, நதி கடக்கும் வழியில் உள்ள ஒன்றியங்கள், குளம், குட்டைகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வந்தது. தற்போது புதர்மண்டி குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கிறது. இதில் பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், இப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தலையிட்டு கௌசிகா நதி செல்லும் பாதையைச் சுத்தம் செய்து தடையில்லாமல் வெள்ளம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு சுமார் ரூ.200 கோடி அளவிற்கு செலவாகும் என பொறியியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று திட்டத்தைச் செயல்படுத்த உதவ வேண்டும்.

இதேபோல அத்திக்கடவு-அவிநாசித் திட்டம் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றினால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாய நிலங்கள் பயனடையும். அதே நேரத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும்.

இத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1832 கோடி நிதி ஒதுக்க மாநில அரசு, மத்திய அரசுக்கு கேட்பு மனு அனுப்பியுள்ளது. இதில் மத்திய அரசு நிதி ஒதுக்காததால் திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் உள்ளது. எனவே, மத்திய அரசு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட நிலங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவில்லை. அத்தகைய நிலங்களை விவசாயிகளிடமே வாரியம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com