கோவை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை

கோவை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.
 கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலையில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கோவை சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, துடியலூர், பேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
 கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (அளவு மில்லி மீட்டரில்): 
வேளாண்மைப் பல்கலைக்கழகம் - 47, பீளமேடு - 34, வால்பாறை சின்கோனா - 30, சின்னக் கல்லாறு - 9 , வால்பாறை பி.ஏ.பி. - 10, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் - 12.
மின்னல் தாக்கி இளைஞர் சாவு: பச்சாபாளையம், சிறுவாணி சாலையைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23). இவர் பேரூர் படித்துறை அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தார். 
அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தபோது, அருகில் உள்ள மரத்தின் கீழே விக்னேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்னல் பாய்ந்ததில் விக்னேஷ் உயிரிழந்தார். பேரூர் காவல் துறையினர் விக்னேஷின் சடலத்தை மீட்டு, பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com