கஜா புயல்: ரூ. 12.8 லட்சம் நிவாரணப் பொருள்கள், 20 பொக்லைன் இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் ரூ.12.8 லட்சம் மதிப்பிலான

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் ரூ.12.8 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களும், பாதிப்புகளை சீர் செய்ய கிரேன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 20 பொக்லைன் இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கோவை மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலசங்கம் மற்றும் ஆலயம் அறக்கட்டளை சார்பில் 1,600 பால் பவுடர் பாக்கெட்கள்,  தலா 1,800 நைட்டி, வேட்டி, தலா 2 ஆயிரம் போர்வை, துண்டுகள், தலா 5 ஆயிரம் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் பிஸ்கெட், பிளீச்சிங் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் என மொத்தம் ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
மேலும் மாநகராட்சி சார்பில் தண்ணீர் லாரிகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவை புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேங்கியுள்ள தண்ணீர் மூலம் நோய் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்காக திரவ குளோரின் ஆகியவை பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர் நல அலுவலர் டாக்டர் சந்தோஷ்குமார், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, செயற்பொறியாளர் பார்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 பொக்லைன் இயந்திரங்கள்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட  புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இவற்றை அப்புறப்படுத்த அதிக அளவில் பொக்லைன் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு கிரேன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோவையில் இருந்து 20 பொக்லைன் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. 
இதில் முதல் கட்டமாக திங்கள்கிழமை 6 பொக்லைன் இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.  இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை 10 பொக்லைன் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 4 இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட உள்ளன. 
கோவை கணபதி எப்.சி.ஐ. சாலையில் உள்ள கோயம்புத்தூர் கிரேன் உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை வட்டார போக்குவரத்து அலுவலர் பால்ராஜ், கொடி அசைத்து லாரிகளை அனுப்பி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அஃப்சல் கான், சரவணன், பாலமுருகன், விஜயகுமார் மற்றும் கோயம்புத்தூர் கிரேன் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

ஆட்சியர் வேண்டுகோள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட நிர்வாகம் மூலமாக புயல் நிவாரணப் பொருள்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவு நிவாரணப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிக்கும் இடத்தில் ஒப்படைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com