ரஃபேல் விமான ஒப்பந்தம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசின் ரஃபேல் விமான ஒப்பந்தத்தைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பாஜக அரசின் ரஃபேல் விமான ஒப்பந்தத்தைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்திய விமானப் படைக்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில், பாஜக அரசு பல ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாகக் கூறி, இதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் ஒரு மாதத்துக்குத் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன்படி, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக், தேசிய செயலரும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய் தத், காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் முகுல் வாஸ்னிக் பேசும்போது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்திய விமானப் படைக்கு 126 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது. அதில் 3 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
 ஒரு விமானம் ரூ.526 கோடி என்ற விலைக்கு 18 விமானங்களை முழுமையாக வாங்கவும், மீதம் 108 விமானங்களை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (எச்.ஏ.எல்.) இணைந்து இந்தியாவிலேயே தயாரிக்கவும், விமான தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை எச்.ஏ.எல்.லுக்கு வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தது.
 ஆனால், பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் ரூ.526 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே ரஃபேல் விமானத்தை தற்போது ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். மன்மோகன் சிங் ஆட்சியில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்த நிலையில், தற்போது வெறும் 36 விமானங்களை மட்டுமே வாங்க ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான கொள்முதலில் மட்டும் சுமார் ரூ.41 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.
 அத்துடன், உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவின் பாதுகாப்புடனும் இறையாண்மையுடனும் விளையாடி வருகிறார் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேசும்போது, மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு ஏழைகளின் அரசு அல்ல. இது கோடீஸ்வரர்களின் அரசு.  ஊழல் புகார்களுக்கு ஆளாகியிருக்கும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.
 ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலர் அருள் பெத்தையா, தெற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், முன்னாள் தலைவர்கள் ஏ.ஆர்.சின்னையன், மகேஷ்குமார், கோவை செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, சரவணகுமார், பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர். இந்த ஊர்வலத்தில் வந்த தொண்டர்கள் ரபேல் விமான பேரத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி விமானம் போன்ற பலூன்களை ஏந்தி வந்தனர். மேலும், வடிவமைக்கப்பட்ட விமான பொம்மையை வாகனத்தில் ஏற்றி எடுத்து வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com