தூய்மை இந்தியா திட்டத்தை தமிழகம் சிறப்பாக செயல்படுத்துகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தூய்மை இந்தியா திட்டத்தை தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


தூய்மை இந்தியா திட்டத்தை தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் பகுதியில் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்க விளம்பரத் தூதுவர் நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தின் 5ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி வரும் 2ஆம் தேதி வரை தூய்மையே சேவை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
கிராமப்புறங்களில்ற் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, தாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் சுமார் 65,000 தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டு தினந்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தூய்மைப் பணிகளின் ஒரு பகுதியாக 12 மாநகராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 123 நகராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் மூலம் சேகரிக்கப்படும் கழிவுப் பொருள்களைத் தரம் பிரித்து மறுசுழற்சி மேற்கொள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தைத் தவிர்க்க பொதுமக்கள், வியாபாரிகள், சில்லறை வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களின் பங்களிப்பை வழங்கிட வேண்டும்.
மாற்று உபயோகப் பொருள்களாக, பனைபொருள்களால் செய்யப்பட்ட தட்டுகள், ஸ்பூன்கள் உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும்போது, அழிந்து வரும் பனை மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பெருகும் சூழல் உருவாகும். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை ஒரு சவாலாக எதிர்கொண்டு செயல்படுத்தி வரும் முதல்வரின் கரத்துக்கு வலுசேர்க்கும் வகையில், மக்கள் அனைவரும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மத்திய நீர், சுகாதாரத் துறை இணைச் செயலர் அருண் பரோகா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com