கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சிறுமிக்கு எச்ஐவி பாதிப்பு: பெற்றோர் புகார்; மருத்துவமனை மறுப்பு

இரண்டு வயது சிறுமிக்கு ரத்தம் ஏற்றியதால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக கோவை அரசு மருத்துவமனை

இரண்டு வயது சிறுமிக்கு ரத்தம் ஏற்றியதால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக கோவை அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. 
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த தம்பதி கடந்த 9 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2017 பிப்ரவரி 6 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன (ஆண், பெண்).   இந்நிலையில்,  பெண் குழந்தைக்கு ஜூலை மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து,  இச்சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அதன் பிறகு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இருதயத்தில் பிரச்னை இருப்பதாகக் கூறி ரத்தம் செலுத்தியுள்ளனர்.  இந்நிலையில், சிறுமிக்கு உடலில் சில பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறி மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது,  சிறுமிக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 
இது குறித்து சிறுமியின் தந்தை கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில் எனது மகளுக்கு  இருதயத்தில் பிரச்னை இருப்பதாகக் கூறி ரத்தம் செலுத்தப்பட்டது.  இதையடுத்து, சில நிமிடங்களில் அங்கு வந்த மற்றொரு மருத்துவர் ரத்தம் ஏற்றப்பட்ட பாட்டிலை கழற்றி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார். அதுகுறித்து கேட்டதற்கு வயதானவர்களுக்கு உரிய ரத்தத்தை தவறுதலாக ஏற்றிவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் வேறு ரத்தம் ஏற்றினர். எனது மகளை மூன்று நாள்களில் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். 
இந்நிலையில், எனது மகளின் உடல் முழுவதும் பிப்ரவரி 6 ஆம் தேதி சிறு கட்டிகள் ஏற்படத் தொடங்கின. கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்த்தோம். எனது மகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். எனது மகளுக்கு வேறு எந்த மருத்துவமனையிலும் ரத்தம் ஏற்றப்படவில்லை. பெற்றோரான எங்களுக்கும் எச்ஐவி பாதிப்பு இல்லை என்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் தவறுதலாக ஏற்றப்பட்ட ரத்தத்தால் எனது மகளுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் புகார் அளிக்கச் சென்றபோது புகாரை வாங்க மறுத்துவிட்டனர்.    எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எனது மகளுக்கும் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் பி.அசோகன் கூறியதாவது:
சிறுமிக்கு கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது உண்மைதான். ரத்த சிவப்பணுக்கள் மட்டுமே அவருக்கு ஏற்றப்பட்டது. இதனால் எச்ஐவி பரவும் வாய்ப்புகள் இல்லை. இது தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்தபோது அவருக்கு எச்ஐவி தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.  சிறுமியை   மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்தான் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு  வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்துத்  தெரிந்த பின்னரே இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com