5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று

தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, உயர் மின்கோபுரம் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகசுந்தரம், முத்து விஸ்வநாதன், வழக்குரைஞர் ஈசன், பார்த்தசாரதி, தங்கமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 இவர்களை சிறையில் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது கடுமையான அடக்குமுறையைக் கையாண்டும், அவர்களைக் கைது செய்தும் மூர்க்கத்தனமான முறையில் திட்டத்தை தமிழக அரசு  செயல்படுத்தி வருகிறது. அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது. 
விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்தும், விவசாயிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் வரும் 18 ஆம் தேதி சட்ட எரிப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தை எங்கள் கட்சி ஆதரிக்கும்.
 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொதுத் தேர்வு முறை அமலுக்கு வந்தால் இடைநிற்றல்தான் அதிகரிக்கும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தொடர்பாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு இவ்வாறு நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது.
 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று கூறியிருப்பது சட்டத்துக்கு விரோதமானது. 
 கோவை மாநகராட்சியில் வீட்டு வரி உயர்வு, குடிநீர் விநியோகம் சூயஸ் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டதைக் கண்டித்து 27 ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என்றார்.
 கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், செயலர் வி.ஆர்.பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com