கோவையில் 445 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல்

கோவையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை மேற்கொண்ட ஆய்வில் 445 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கோவையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை மேற்கொண்ட ஆய்வில் 445 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது. 
கோவை, போத்தனூரில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் காமராஜ் உள்பட அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கணபதியைச் சேர்ந்த கா.புவனேஸ்வரன் (50) என்பவர் அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைகள், பேக்கரிகளுக்கு தேயிலைத் தூள் விநியோகித்துள்ளார்.
தேயிலைத் தூள் பாக்கெட்டுகளைப் பார்த்து சந்தேகமடைந்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் புவனேஸ்வரனைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கலப்பட தேயிலைத் தூள் விற்பனை செய்தது தெரியவந்தது.  தொடர்ந்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் முன்னிலையில் புவனேஸ்வரனை விசாரித்தபோது, கணபதியில் உள்ள அவரது வீட்டில் கிடங்கு அமைத்து கலப்படத் தேயிலைத் தூள் தயாரித்து வந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து,  கணபதி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள புவனேஸ்வரன் வீட்டில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் முருகேசன்ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கிடங்கில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 445 கிலோ கலப்பட தேயிலைத் தூளை பறிமுதல் செய்தார். 
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், "கட்செவி அஞ்சல் மூலம் வந்த புகாரையடுத்து கோவை, போத்தனூரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டபோது, கலப்பட தேயிலைத் தூள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கலப்பட தேயிலைத் தூள் உற்பத்தியை வீட்டின் ஒருபகுதியிலேயே கிடங்கு அமைத்து புவனேஸ்வரன் மேற்கொண்டு வந்துள்ளார்.
445 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும். தேயிலைத் தூளின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 ன் படி, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com