மத்திய அரசு விருதுக்கு மத்வராயபுரம் ஊராட்சி தேர்வு

சுகாதாரம், பொதுப்பணித் திட்ட வளர்ச்சிக்காக மத்திய அரசின் விருதுக்கு கோவை மாவட்டம், மத்வராயபுரம் ஊராட்சி  தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சுகாதாரம், பொதுப்பணித் திட்ட வளர்ச்சிக்காக மத்திய அரசின் விருதுக்கு கோவை மாவட்டம், மத்வராயபுரம் ஊராட்சி  தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம், கழிப்பறை பயன்பாடு, அனைவருக்கும் வீடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் கிராம வளர்ச்சி உள்பட  8 பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்கள், வட்டாரங்கள் மற்றும் கிராமங்களுக்கு தீனதயாள் உபத்யாய பஞ்சாயத்து சக்திகரன் புரஸ்கார் விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகிறது. 
கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துக்கான தீனதயாள் உபத்யாய பஞ்சாயத்து சக்திகரன் புரஸ்கார் விருதுக்கு கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரத்துக்கு உள்பட்ட மத்வராயபுரம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.   தவிர, மாவட்ட பஞ்சாயத்து விருதுக்கு சேலம் மாவட்டமும், வட்டார பஞ்சாயத்துக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரமும், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வட்டாரமும், கிராம பஞ்சாயத்துக்கு சேலம், கோவை, நாமக்கல், ஈரோடு, மதுரை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து தலா ஒரு கிராமப் பஞ்சாயத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூறியதாவது: 
தீனதயாள் உபத்யாய பஞ்சாயத்து சக்திகரன் புரஸ்கார் விருதுக்கான ஆய்வினை மத்தியக் குழு அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 7 நாள்கள் மேற்கொண்டனர். இதில் அலுவலக செயல்பாடுகள், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், பொது சுகாதாரம், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் பயன்பாடு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. தவிர மக்களிடமும் ஊராட்சியின் செயல்பாடுகள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தனர். அதன் அடிப்படையில் பொது சுகாதாரம், வளர்ச்சித் திட்டப் பணிகள் பிரிவில் சிறந்து விளங்கும் ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. விருதுடன் பரிசுத்தொகையும் அளிக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com