பார் உரிமையாளரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளர் கைது

கோவையில் தனியார் பார் உரிமையாளரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் தனியார் பார் உரிமையாளரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 கோவை, கணபதியைச் சேர்ந்தவர் மார்ட்டின் ரிச்சர்ட். இவரது மகன் ஜான்சன் (40) நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். இவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள என்.எஸ்.ஆர்.சாலையில் உள்ள தனியார் மது விடுதி ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், தான் வைத்திருக்கும் துப்பாக்கியைக் காட்டி தனது நண்பர்களுடன் விபரீதமான முறையில் பல முறை விளையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மது விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள், ஜான்சனின் நடவடிக்கை குறித்து பார் உரிமையாளர் ஜெயராஜுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு நண்பர்களுடன் மது அருந்தச் சென்ற ஜான்சன், வழக்கம்போல தனது துப்பாக்கியை எடுத்து அங்குள்ளவர்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த விடுதி உரிமையாளர் ஜெயராஜ், உடனடியாக விடுதிக்குச் சென்று ஜான்சனை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். 
மேலும், தனது தொழில் பாதிக்கப்படுவதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஜான்சனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜான்சன், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜெயராஜின் தலையில் வைத்துக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். பின் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீஸாரிடம் ஜெயராஜ் புகார் செய்தார். 
 இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சாய்பாபா காலனி போலீஸார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜான்சனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com