என்ன செய்ய வேண்டும் நமது எம்.பி?

தென்னிந்தியாவின் பாதுகாப்பு அரணாக மேற்குத் தொடர்ச்சி மலை விளங்குகிறது. இந்த மலை இல்லையென்றால் நமக்கு தண்ணீர் இல்லை


தென்னிந்தியாவின் பாதுகாப்பு அரணாக மேற்குத் தொடர்ச்சி மலை விளங்குகிறது. இந்த மலை இல்லையென்றால் நமக்கு தண்ணீர் இல்லை. ஆக, மேற்குத் தொடர்ச்சி மலையை தண்ணீர் மலையாக நாம் கருத வேண்டும். 
2010- இல் மாதவ் கார்கில் குழுவும், 2011 - இல்  கஸ்தூரி ரங்கன் குழுவும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பது குறித்து தெளிவாக மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
இந்த அறிக்கையை அமல்படுத்த வேண்டும். யானைகளின் பாரம்பரிய வழித்தடங்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்காமல் இருக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நோக்கத்துக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுப்பதற்கு குரல் கொடுப்பவராக இருக்க வேண்டும்.
க.காளிதாஸ்ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் 

கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக மழையில்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது. மழை வரும்போது, அதனை வீணாக்காமல் நீரை தேக்கி வைத்து பயன்படுத்த புதிய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். கோவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் கலந்து நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதைத் தடுக்க நீராதாரங்களைச் சுத்தம் செய்து, நீர்வழிப் பாதைகளை சீரமைக்க வேண்டும்.  குப்பைகளை அப்புறப்படுத்தி சுகாதாரமான கோவையை உருவாக்க வேண்டும். 
உள் கட்டமைப்பு, நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமூக அக்கறையோடு தன்னலம் கருதாமல் எண்ணற்ற இளைஞர்கள் சுற்றுச் சூழலை பாதுகாக்க சீரிய முயற்சி எடுத்து வருகின்றனர். அவர்களை அரசு கெளரவித்து ஊக்குவிக்க வேண்டும்.
வனிதா மோகன், 
சிறுதுளி அமைப்பு நிர்வாக அறங்காவலர் 

வனத் துறையில் ஏராளமான அலுவலர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், மனித - விலங்கு மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக யானைகளால் விவசாயிகள், கிராம மக்கள் அதிகமாக உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க வனத் துறை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  கோவையில் சாலை விரிவாக்கத்துக்காக சில இடங்களில் அவசியமற்ற மரங்களும் வெட்டப்படுகின்றன. வருங்காலத்தில் மரங்கள் பாதுகாப்புக் குழு ஏற்படுத்தி இவற்றை கண்காணிக்க வேண்டும். சுற்றலாத் தலங்களில் அறை வாடகை, நுழைவுக் கட்டணம் உயர்வால், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லுயிர் பெருக்க பாதுகாப்புக் குழு, நீராதாரங்கள் பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும்.
என்.ஐ.ஜலாலுதீன்,
இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com