பாஜக ஆட்சி தொடர்ந்தால் மாநில சுயாட்சி பாதிக்கப்படும்: பிரகாஷ் காரத் பேச்சு

பாஜக ஆட்சி தொடர்ந்தால் மாநில சுயாட்சி உரிமைகள் பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் பேசினார்.


பாஜக ஆட்சி தொடர்ந்தால் மாநில சுயாட்சி உரிமைகள் பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் பேசினார்.
 கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து சிங்காநல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது:
 சுதந்திரத்துக்குப் பிறகான தேர்தல்களில் முக்கியமானத் தேர்தல் இது. அம்பேத்கரின் கடின முயற்சியால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைக் குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் பாஜக இறங்கியுள்ளது. 
 ஜனநாயகம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள அணிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்த்து வருகின்றன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற தவறான கொள்கையின் கீழ் பாஜக செயல்பட்டு வருகிறது. இது சிறுபான்மையினருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் எத்தகைய ஜாதி, மத மோதல்களை பாஜக உருவாக்கியுள்ளது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.
 ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கடந்த தேர்தலின்போது மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் 1 கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அதில் 88 லட்சம் பேர் பெண்கள். சிறு, குறு தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக கோவை மாவட்டம் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.  கடன் தொல்லையில் விவசாயிகள் தற்கொலை செய்வதைத் தடுக்க பாஜக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அம்பானி போன்ற பெருநிறுவன முதலாளிகள் வளம் பெறும் வகையில் மோடி ஆட்சி செய்கிறார்.
 ரஃபேல் ஒப்பந்தத்துக்குப் பிறகு பல ஆயிரம் கோடி வரிச் சலுகையை அனில் அம்பானி குழுமத்துக்கு பிரான்ஸ் அரசு வழங்கியுள்ளது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் பலனடைவது பெருநிறுவன முதலாளிகள் மட்டுமே. சந்தர்ப்பத்தின் காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. சுயநலத்தால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட கூட்டணி இது. பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மாநில சுயாட்சி உரிமைகள் பாதிக்கப்படும் என்றார்.
 இக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com