ஜி.எஸ்.டி.யால் தொழிற்சாலைகள் மூடப்படவில்லை: பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜி.எஸ்.டி. காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படவில்லை என்றும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய

ஜி.எஸ்.டி. காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படவில்லை என்றும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்னையாலேயே ஆலைகள் மூடப்பட்டதாகவும் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது:
ஜி.எஸ்.டி. காரணமாகவே தொழிற்சாலைகள் மூடப்பட்டதைப் போலவும், தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டதைப் போலவும் பொய்யான தகவல்களை கம்யூனிஸ்டுகள் மக்களிடம் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 40 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்கள் உருவாகியிருக்கின்றனர். கோவையில் கொடிசியா சார்பில் 2 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாகியுள்ளன.
தொழில்முனைவோர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டது, தொழிற்சாலைகளை நவீனமயமாக்குவதற்கான மனநிலையில் இல்லாதது, வாரிசுகள் இல்லாததால் தொழிலைத் தொடர முடியாமல் போனது போன்ற பல்வேறு காரணங்களால்தான் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதை வைத்துத்தான் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்கூடங்கள் மூடப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்தது.
 அத்துடன் சிறு, குறு தொழில்கூடங்கள் மூடப்படுவதற்கான முக்கிய காரணம், அடிப்படைக் காரணம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட 13 மணி நேர மின்வெட்டுதான். ஜெனரேட்டர்களுக்கு டீசல் வாங்கி கட்டுப்படியாகாததால் நஷ்டப்பட்டவர்கள்தான் ஏராளம். இருப்பினும் ஜி.எஸ்.டி.யைப் பொறுத்தவரையிலும் தொழில் துறையினரின்  கோரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. வெட்கிரைண்டர்கள், ஜவுளித் தொழில்களுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதைப் போன்று தேர்தலுக்குப் பிறகு ஜாப் ஆர்டர்களுக்கும் வரி குறைக்கப்படும். 
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவைப்படுகின்றன. நீட் தேர்வால் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் முறையாக பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்று வருகின்றனர். நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்கள் வெற்றி, தோல்விகள் குறித்து கவலைப்படமாட்டார்கள் என்றார். 
பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com