ஜி.எஸ்.டி. குறித்து கருத்து:  பாஜக வேட்பாளருக்கு தொழில் அமைப்புகள் கண்டனம்

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனின் ஜி.எஸ்.டி. குறித்த பேச்சு

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனின் ஜி.எஸ்.டி. குறித்த பேச்சு தங்களை வேதனை அடையச் செய்திருப்பதாக சிறு, குறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ், கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மணிராஜ், தமிழக கிரில் தயாரிப்போர் நலசங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சாகுல்அமீது ஆகியோர் இணைந்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. போன்றவை இந்தத் தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். தமிழக சட்டப் பேரவையில் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டதோடு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகியும் இருப்பதாக தொழில் துறை அமைச்சர் அறிக்கையை முன்வைத்தார். இந்த எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும் என்பதே உண்மை. 
இதன் காரணமாகவே மக்களவைக் கூட்டத்தொடரின் இறுதி நாள்களில் அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, மத்திய அரசின் நடவடிக்கையால் சிறு, குறு தொழில் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்திருப்பதாக குற்றம்சாட்டினார். ஆனால், மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கட்சிகள் ஒரே அணியில் சேர்ந்திருப்பதால் மேற்கண்ட உண்மைகளை திசை திருப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பால் கோவையில் உள்ள சிறு, குறு தொழில்கள் மீளவே முடியாத அளவுக்கு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான தொழில்கூடங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இது ஆளும் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால்தான் தனது பிரசாரத்தின் தொடக்க நாளில் ஜி.எஸ்.டி.யால் தொழில்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது உண்மைதான் என்றும் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை சரி  செய்துவிடுவோம் எனவும், ஜாப் ஆர்டர்களுக்கு 18 சதவீதமாக உள்ள வரியை 5 சதவீதமாக குறைப்போம் என்றும்  கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்  வாக்குறுதி அளித்தார். அதேபோல், தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடியும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.யால் எந்த தொழிலும் பாதிக்கவில்லை, மாறாக வளர்ச்சிதான் அடைந்திருக்கிறது. மூடப்பட்ட தொழிற்கூடங்களின் உரிமையாளர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு சென்று ஐக்கியமாகி விட்டார்கள் என உண்மைக்கு மாறாக பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இவரே கடந்த சில நாள்களுக்கு முன்பு சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள்தான் ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்தார். இதுபோல் அவர் மாற்றி மாற்றிப் பேசுவது தொழில் முனைவோர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதுடன் இவ்வாறான பேச்சு அவருக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com