நிமோகாக்கல் தடுப்பூசி: மாவட்டத்தில் 250 குழந்தைகளுக்கு வழங்க திட்டம்

கோவையில் கடந்த ஆண்டில் 1.5 கிலோ மற்றும் அதற்கும் குறைவான எடையில் பிறந்த 250 குழந்தைகளுக்கு

கோவையில் கடந்த ஆண்டில் 1.5 கிலோ மற்றும் அதற்கும் குறைவான எடையில் பிறந்த 250 குழந்தைகளுக்கு நிமோகாக்கல் தடுப்பூசி போடப்படவுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பூ.அசோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: 
ஊட்டச்சத்து பற்றாக்குறை, குறைமாத பிரசவம் உள்பட பல்வேறு காரணங்களால் சராசரி எடையைவிட குறைந்த எடையில் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 1.5 கிலோ, அதற்கும் குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் உள்பட பல்வேறு உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருக்கும்.
இதனால், அக் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நோய் தொற்றுகள் ஏற்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியும் போதிய அளவுக்கு இருக்காது. இதனால் 30 சதவீதம் வரை குழந்தை இறக்க வாய்ப்புள்ளது. எனவே, எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் அரசு  மருத்துவமனைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படும். 
இதில் நுரையீரலில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க நிமோகாக்கல் தடுப்பூசி போடப்படுகிறது. பிறந்ததில் இருந்து முறையே 1.5, 2.5, 3.5 மற்றும் 15 ஆவது மாதம் என நான்கு முறை இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்பட வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு வழங்க 1,000 தடுப்பூசி மருந்துகள் கோவை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 
இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் போடப்படும். மாவட்டத்தில் 250 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. 
ஆனால் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. 
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குழந்தைகளுக்கு நிமோகாக்கல் தடுப்பூசியை போட்டு தொடங்கிவைக்கிறார். மேலும், ரத்த நாள அறுவை சிகிச்சை அரங்கத்தின் புதியக் கட்டடம், உடல் உறுப்புகள் தானம் விழிப்புணர்வு விழாவையும் தொடங்கி வைக்கிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com