இஸ்கானில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் கோவையில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் கோவையில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கொடிசியா வளாகம் அருகில் உள்ள இஸ்கானில், கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை தொடங்கி 25 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 
முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ஆராதனை தொடங்கியது. இதைத் தொடர்ந்து கீர்த்தனை, பஜனை, சிறப்பு சொற்பொழிவுகள், சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. பட்டிமன்றம், நாடகம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்ரீ ராதா கிருஷ்ணருடன் ஸ்ரீ ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
 இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு ஆராதனைகள், கீர்த்தனைகள், பஜனை, சிறப்பு சொற்பொழிவுகள், மஹா கலசாபிஷேகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 25 ஆம் தேதி இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியார் ஸ்ரீல பிரபுபாதரின் பிறந்த நாளான வியாச பூஜையில், பிரபுபாதரின் மூர்த்திக்கு அபிஷேகம், சிறப்பு ஆரத்தி, புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெறுகின்றன. கிருஷ்ணர் தோன்றியதற்கு மறுநாளில் அவருடைய தந்தை நந்தகோபர் விருந்து அளித்ததை நினைவு கூறும் வகையில் நந்தோற்சவ விருந்தும் நடைபெற உள்ளது.
 இந்த மூன்று நாள்களிலும் இஸ்கான் மண்டலச் செயலர் பக்தி வினோத சுவாமி மஹாராஜின் ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு, கோவை இஸ்கான் செயலர் ஸ்ரீனிவாச ஹரிதாஸின் கிருஷ்ண கதை சொற்பொழிவும் நடைபெறுவதாக இஸ்கான் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியில்...
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஸ்ரீ விநாயகா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பள்ளி மாணவர்களுக்கான ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை பள்ளி நிர்வாகி நிர்மலாதேவி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் முனைவர் ஹரிஹரசுதன் முன்னிலை வகித்தார்.
விழாவில் எல்கேஜி, யுகேஜி மழலையர் வகுப்பு மாணவர்கள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com