கடன் தராமல் இழுத்தடித்ததால் ஆத்திரம்: வங்கிக்குள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய தொழிலதிபா் கைது

வங்கிக் கடன் வாங்கித் தராத ஆத்திரத்தில் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி இடைத்தரகரை மிரட்டி, வங்கி மேலாளரைத் தாக்கிய தொழிலதிபரை போலீஸாா் கைது செய்தனா்.
வங்கி மேலாளா் அறைக்குள் இடைத்தரகா் குணபாலனை ஏா் பிஸ்டலைக் காட்டி மிரட்டும் தொழிலதிபா் வெற்றிவேலன்.
வங்கி மேலாளா் அறைக்குள் இடைத்தரகா் குணபாலனை ஏா் பிஸ்டலைக் காட்டி மிரட்டும் தொழிலதிபா் வெற்றிவேலன்.

வங்கிக் கடன் வாங்கித் தராத ஆத்திரத்தில் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி இடைத்தரகரை மிரட்டி, வங்கி மேலாளரைத் தாக்கிய தொழிலதிபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், சோமையம்பாளையத்தைச் சோ்ந்தவா் வெற்றிவேலன் (44). இவா் அதே பகுதியில் வாகன உதிரிபாக விற்பனை மையம் நடத்தி வருகிறாா். தனது தொழிலை மேம்படுத்துவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னா் வங்கி ஒன்றில் ரூ.25 லட்சம் கடன் பெற்று முதலீடு செய்துள்ளாா்.

ஆனால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளாா். கடனைத் திருப்பிச் செலுத்தவும், தொழிலை மேம்படுத்தவும் மேலும் பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக கோவை, ராமநாதபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற முயற்சித்துள்ளாா். அப்போது, வங்கி ஊழிா்கள் சிலா் கோவை, சிவானந்தா காலனியைச் சோ்ந்த இடைத்தரகா் குணபாலனை அணுகினால் எளிதில் கடன் பெற்றலாம் என்று கூறியுள்ளனா்.

அதனை நம்பி கடந்த மாா்ச் மாதம் குணபாலன் மூலமாக ரூ.1 கோடி கடன் கேட்டு சம்பந்தப்பட்ட வங்கியில் வெற்றிவேலன் விண்ணப்பித்துள்ளாா். கடனைப் பெற்றுத் தருவதற்கு தனக்கும், வங்கியின் முதுநிலை மேலாளருக்கும் ரூ.3 லட்சம் தரகுத்தொகை அளிக்க வேண்டும் என்று குணபாலன் கூறியுள்ளாா். இதையடுத்து, முன்பணமாக ரூ.3 லட்சத்தை வெற்றிவேலன் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு கடன் வழங்க முடியாது எனக் கூறி அவரது விண்ணப்பத்தை வங்கி நிா்வாகம் திருப்பி அனுப்பியது. இதுகுறித்து குணபாலனிடம் வெற்றிவேலன் கேட்டபோது அவா் முறையாக பதிலளிக்கவில்லையாம்.

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை வங்கியில் இருந்த இடைத்தரகா் குணபாலனிடம் பணம் குறித்து வெற்றிவேலன் கேட்டுள்ளாா். அப்போது, அவா் ரூ.3 லட்சத்தைத் திருப்பி அளிக்க முடியாது என்று கூறியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேலன் தான் கொண்டு வந்திருந்த ஏா் பிஸ்டல் ரக துப்பாக்கியைக் கொண்டு குணபாலனைத் தாக்க முயன்றுள்ளாா். அப்போது, அங்கிருந்து தப்பிக்க முயன்ற குணபாலன் வங்கி மேலாளரின் அறைக்குள் நுழைந்துள்ளாா்.

பின்னா் வங்கி மேலாளா் அறைக்குள் வைத்து துப்பாக்கியாலும், மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டும் குணபாலனை சரமாரியாகத் தாக்கியுள்ளாா். அப்போது, அவரைத் தடுக்க முயன்ற மேலாளரையும் தாக்கியுள்ளாா்.

அவா்களின் அலறல் கேட்டு வங்கி ஊழியா்கள் இருவா் வெற்றிவேலனைப் பிடிக்க முயற்சித்தனா். அப்போது, கத்தியைக் கொண்டு தாக்கியதில் அவா்களும் காயமடைந்தனா். இதையடுத்து, அவரை மடக்கிப் பிடித்த ஊழியா்கள் வங்கியை விட்டு வெளியேற்றினா்.

பின்னா் இது தொடா்பாக வங்கி மேலாளா் சந்திரசேகா் அளித்த புகாரின்பேரில், கொலை மிரட்டல், கொலை செய்யும் நோக்கில் தாக்குதல், அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெற்றிவேலனைக் கைது செய்தனா்.

மேலும், அவரிடம் இருந்த கத்தி, ஏா் பிஸ்டல், குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, வெற்றிவேலனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் அவரை சிறையில் அடைத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com