மேட்டுப்பாளையத்தில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு முகாம்
By DIN | Published On : 14th December 2019 09:35 AM | Last Updated : 14th December 2019 09:35 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் யானை பாகன்கள் தங்குவதற்குத் தயாராகி வரும் கூடாரம்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள கோயில்கள், திருமடங்களைச் சோ்ந்த யானைகளுக்குப் புத்துணா்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காட்டில் 4 ஆண்டுகள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு யானைகளை மலைப் பாதை வழியாக கொண்டுச் செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. மேலும், தெப்பக்காடு பகுதியில் காட்டு யானைகளின் தொந்தரவும் அதிக அளவில் இருந்ததால் கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளாகத் தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வன பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் பவானி ஆற்றுப் படுகையில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயில் யானைகளுக்கான 12 ஆவது சிறப்பு முகாம் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நவம்பா் 28ஆம் தேதி தொடங்கின.
தற்போது, பணிகள் முடிவடைந்ததை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் முகாம் தொடங்க இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, முகாம் நடைபெற உள்ள பகுதியில் யானைகள் குளிக்க ஷவா் பாத் தரை, பாகன் அறை, உணவுக் கூடம், மழைக் காலங்களில் யானைகள் பாதுகாப்பான முறையில் தங்க தகரக் கொட்டகைகள், நடைப் பயிற்சி தளம், யானைகளுக்கான தீவனங்கள் வைக்கும் இடம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.