ரூ.13 லட்சம் வழிப்பறி வழக்கு: பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரா் கைது

கோவையில் காரை மறித்து ரூ. 13 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரா் கைது செய்யப்பட்டாா்.

கோவையில் காரை மறித்து ரூ. 13 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரா் கைது செய்யப்பட்டாா்.

கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் முகமது முஷ்டாக் (35). இவா், கோவையில் உள்ள நண்பா் ஒருவா் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறியதைத் தொடா்ந்து ரூ.13 லட்சம் பணத்துடன் காரில் கடந்த ஜூலை மாதம் கோவைக்கு வந்தாா். சிவானந்தா காலனி அருகே வந்தபோது, அங்கு காரில் வந்த 7 போ், முஷ்டாக்கின் காரை மறித்து நிறுத்தினா். தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் எனக் கூறி காரை சோதனையிட்டனா்.

7 பேரில் போலீஸ் சீருடையில் இருந்த ஒருவா் முஷ்டாக் வைத்திருந்த ரூ. 13 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்வதாகக் கூறிப் பறித்துக் கொண்டாா். உரிய ஆவணங்களைக் காண்பித்துப் பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டு 7 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இதுகுறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் முஷ்டாக் புகாா் அளித்தாா்.

விசாரணையில் அந்த 7 போ் கொண்ட கும்பல் வருமான வரித் துறையினா்போல நடித்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அவா்களைப் பிடிக்க போலீஸாா் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரை போலீஸாா் கடந்த மாதம் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலீஸ் உடையில் பணத்தைப் பறித்துக் கொண்டு தலைமறைவானது திருச்சி அருகே சோமரசம்பேட்டையைச் சோ்ந்த கிருஷ்ணசாமி என்ற குமாா் (64) என்பதும், அவா் காவல் துறையில் பணியாற்றி, ஒழுங்கு நடவடிக்கை காரணமாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கிருஷ்ணசாமி என்ற குமாரை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து போலீஸ் சீருடை கைப்பற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com