மத்திய அரசைக் கண்டித்து 3 நாள் வேலைநிறுத்தம்: பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

நாடு முழுவதிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றையை வழங்க மறுக்கும் மத்திய

நாடு முழுவதிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றையை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து 3 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
 பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் கோவை பி.எஸ்.என்.எல். தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலர் பாபு ராதாகிருஷ்ணன், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் கே.நடராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி சேவையைக் கொடுக்க ஆரம்பிக்கும் வரை தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல அதிகப்படியான கட்டணத்தில் சேவையை வழங்கி வந்தன. 2002 ஆம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். சேவையைத் தொடங்கிய பிறகே செல்லிடப்பேசி சேவை சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களைச் சென்றடைந்தது. ஆனால் இந்த பொதுத் துறை நிறுவனத்தை சீரழிக்கும் வகையில்   நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு தேவையான கருவிகளை வாங்குவதற்கு மத்திய அரசு பல முட்டுக்கட்டைகளைப் போட்டது. இதனால் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மத்திய அரசு எந்த நிதியையும் வழங்காமல், வளர்ச்சியைத் தடை செய்ய கடுமையாக முயற்சித்து வருகிறது.  பிற நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே 4 ஜி சேவையை வழங்கத் தொடங்கிவிட்டன. ஆனால், பி.எஸ்.என்.எல்.லுக்கு மட்டும் அதற்கான அலைக்கற்றையை வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் 4 ஜி அலைக்கற்றை வழங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர், பி.எஸ்.என்.எல். கூட்டமைப்பிடம் உறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. 
 நிதி நெருக்கடியில் இருக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மிகக் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 4 மாத ஊதியம் வழங்கவில்லை.  நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்து கட்ட வேண்டிய பி.எஃப்., இன்சூரன்ஸ், வங்கிக் கடன் தவணை உள்ளிட்ட எதையும் செலுத்தாமல் உள்ளது.  இந்த நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட 9 முக்கிய தொழிற்சங்கங்கள் அடங்கிய அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது.
இந்த போராட்டத்தை விளக்கி தெருமுனைப் பிரசாரம் நடத்த உள்ளோம். வரும் 15 ஆம் தேதி நாடு முழுவதிலும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பேரணியில் ஈடுபட உள்ளனர். எனவே, எங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு விரைவில் பரிசீலிக்க வேண்டும் என்றனர். 
பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத் தலைவர் சிவசண்முகம், ஊழியர் சங்க பொதுச் செயலர் சி.ராஜேந்திரன், பிரசன்னா, ஓய்வூதியர் சங்கத்தின் வெங்கட்ராஜூ, ராபர்ட் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com