கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு:  இளைஞர் கைது

கோவையில் கோயிலில் இருந்து ஐம்பொன் சிலை, பணம் ஆகியவை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் கோயிலில் இருந்து ஐம்பொன் சிலை, பணம் ஆகியவை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
 கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒன்றரை அடி உயரத்தில், 5 கிலோ எடையில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் சிலை இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தனர். மேலும், கோயிலுக்குள் இருந்த அம்மன் சிலையும் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாரும், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினர்.
 இதையடுத்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும், மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதில் கோயில் உண்டியல் மற்றும் சிலை வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து கைரேகைகள் எடுக்கப்பட்டன. 
 கோயிலின் அருகேயுள்ள நியூ ஸ்கீம் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஒன்றில் கோயிலில் இருந்து திருடப்பட்ட அம்மன் சிலை இருப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் சிலையை மீட்டனர். அது கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைதான் என்பதை அறநிலையத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர் போலீஸார் அம்மன் சிலையை கோயிலில் ஒப்படைத்தனர். இதையடுத்து கோயில் செயல் அலுவலர் ரமேஷ்குமார் அளித்தப் புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கோயில் வளாகத்துக்குள் நுழைந்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் அம்மன் சிலையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றது பதிவாகி இருந்தது. 
 மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது பாப்பநாயக்கன்பாளையம்,  ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த தண்டபாணி(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து போலீஸார் நடத்திய விசாரணையில், கோயில் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா இணைப்பு மற்றும் அலார சத்தத்துக்கான ஒயர்களைத் துண்டித்துவிட்டு  சிலையைத் திருடியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com