ரூ.1 கோடி நகைகள் கொள்ளை வழக்கு: வேலூரைச் சேர்ந்த இருவரை காவலில் விசாரிக்க அனுமதி

நகைக் கடைக்குச் சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வேலூரைச் சேர்ந்த

நகைக் கடைக்குச் சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வேலூரைச் சேர்ந்த இருவரைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கோவையில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த சி.ஆர்.அர்ஜுன், டி.எஸ்.வில்பிரட் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். 
இவர்கள் இருவரும் திருச்சூரில் உள்ள தங்களது நிறுவனத்தின் கிளையில் இருந்து கோவை கிளைக்குத் தேவையான ரூ. 98.50 லட்சம் மதிப்பிலான 3.1கிலோ தங்க நகைகள் மற்றும் 243 கிராம் வெள்ளிப் பொருள்களை நிறுவனத்துக்குச் சொந்தமான காரில் ஜனவரி 7ஆம் தேதி எடுத்து வந்தனர். 
இவர்களது கார் கோவை மாவட்டம், நவக்கரை அருகே வந்தபோது, இரு கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து, ஊழியர்கள் இருவரையும் தாக்கிவிட்டு நகைகளுடன் காரில் தப்பிச் சென்றது. இதுதொடர்பாக கோவை, க.க.சாவடி போலீஸாரும்,  கேரள மாநில போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே கோவை- மதுக்கரை, தென்றல் நகர் அருகே நகைக் கடைக்குச் சொந்தமான காரையும், மதுக்கரை, வழுக்குப்பாறை பகுதி அருகே கொள்ளையர்கள் பயன்படுத்திய காரையும் அடுத்தடுத்த நாள்களில் போலீஸார் மீட்டனர். 
கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கேரளம், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து தனிப்படையினர் சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 
இந்நிலையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை- ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜனவரி 10 ஆம் தேதி சரணடைந்தனர். 
பின்னர் இவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:
திருவள்ளூரைச் சேர்ந்த ரசூல் என்பவரது இளைய மகன் ஃபரோஸ் அலி (26) தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நகைக் கடைக்குச் சொந்தமான நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். 
பின்னர் திருவள்ளூருக்குத் தப்பிச் சென்ற ஃபரோஸ் அலி, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பாதியை தனது தாய் ஷமா மற்றும் மூத்த சகோதரர் முகமது சலீமிடம் (29) அளித்துவிட்டு அங்கிருந்து தலைமறைவானார்.
இந்நிலையில் நகைகளை திருவள்ளூரில் வைத்திருந்தால் பிடிபடுவோம் எனக் கருதிய முகமது சலீம், நகைகளுடன் திருப்பதியில் உள்ள தனது நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருக்க முடிவு செய்தார். 
இதன்படி நகைகளுடன் திருப்பதிக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஃபரோஸ் அலியின் தாய் ஷமா மற்றும் சகோதரர் முகமது சலீமை திருப்பதி ரயில் நிலையத்தில் வைத்து திருப்பதி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.965 கிலோ கிராம் தங்க நகைகள், 15 கிராம் எடையுள்ள வைரக் கற்கள், 243 கிராம் வெள்ளி நகைகளைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த தமிழ்ச்செல்வன், ஜெயபிரகாஷ் ஆகியோரை கோவை மாவட்ட நீதித் துறை நடுவர் மன்றத்தில் (எண்: 7) போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தி 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு செய்தனர். 
மனுவை விசாரித்த நீதித் துறை நடுவர் ஆர்.பாண்டி, இருவரையும் 24 ஆம் தேதி வரை 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். 
இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்குத் திட்டம் தீட்டிய ஃபரோஸ் அலி உள்ளிட்ட சிலரை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com