மேட்டுப்பாளையம் அருகே கார் மீது பைக் மோதல்: ஒருவர் சாவு, 6 பேர் படுகாயம்
By DIN | Published On : 29th January 2019 04:08 AM | Last Updated : 29th January 2019 04:08 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் அருகே கார் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே சின்னகாளியூர் தாசகாளியூர் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சப்ப கவுடர் மகன் வெள்ளியங்கிரி (38), சின்னகள்ளிப்பட்டி, கல்லகரை கிராமத்தைச் சேர்ந்த நஞ்சப்பன் மகன் சங்கர் (36), சடையப்பன் மகன் ராமசாமி (48) ஆகியோர் சிறுமுகை-சக்தி சாலையில் பெத்திக்குட்டை அருகே பைக்கில் திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, சிறுமுகை, காந்தி நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செந்தில்குமார் (40), பழனியப்பன் மனைவி சரோஜா (45), மேட்டுப்பாளையம், நடூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ், அவரது மனைவி பழனியம்மாள் (49), ஆகியோர் வந்த காரில் வந்து கொண்டிருந்தனர்.
இரும்பறை பெத்திக்குட்டை அருகே வந்தபோது கார் மீது பைக் மோதியது.
இதில் பைக்கை ஓட்டி வந்த வெள்ளியங்கிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசாமி, சங்கர், செந்தில்குமார், பழனியம்மாள், நடராஜ், சரோஜா ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காரமடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.