இந்திய வேளாண் துறை பிரச்னைகளைத் தீர்க்க தமிழர்கள் மீண்டும் முன்வர வேண்டும்: மத்திய வேளாண் அமைச்சக அலுவலர்

இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை பிரச்னைக்கு கடந்த 1960-களில் மூன்று தமிழர்கள் தீர்வு கண்டதைப் போல, இப்போது

இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை பிரச்னைக்கு கடந்த 1960-களில் மூன்று தமிழர்கள் தீர்வு கண்டதைப் போல, இப்போது வேளாண்மைத் துறையில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண தமிழர்கள் முன்வர வேண்டும் என மத்திய வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகத்தின் அங்கமான தேசிய மானாவாரி விளைநிலப் பகுதி ஆணையத் தலைமைச் செயல் அலுவலர் அசோக் தல்வாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 49-ஆவது நிறுவன நாள், தொலைநிலைக் கல்வி பட்டத் தகுதி பெறும் நாள் நிகழ்ச்சி ஆகியவை பட்டமளிப்பு விழா அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றன. 
விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ.குமார் தலைமை வகித்தார். மேற்கு மண்டல தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி ஷீலி பர்மன் வாழ்த்திப் பேசினார். இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தேசிய மானாவாரி விளைநிலப் பகுதி ஆணையத் தலைமைச் செயல் அலுவலர் அசோக் தல்வாய், தொலைநிலைக் கல்வி மூலம் படிப்பை முடித்த 57 பேருக்கு பட்டம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது, 25 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள், 20 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழகம்தான் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, பிற மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு 1960-இல் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உணவு உற்பத்தியில் தன்னிறைவும், தற்போது மிகையான உற்பத்தியும் உள்ளது. ஆனால் இதில் சோகம் என்னவென்றால் மிகையான உற்பத்தி செய்யும் விவசாயிகள் தற்போது பசியாலும், கடனாலும் வாடி வருகின்றனர்.
2015 - 16-ஆம் ஆண்டு ஆய்வின்படி இந்திய விவசாயிகளின் ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரம் மட்டுமே. அரசுத் துறைகளில் கடை நிலை ஊழியர்கள் கூட மாதம் குறைந்தது ரூ.22 ஆயிரம் சம்பாதிக்கும்போது, நம் அனைவருக்குமான உணவை உற்பத்தி செய்பவர்களின் மாத வருவாயோ ரூ.8 ஆயிரத்தைத் தாண்டவில்லை. இதனால் நாட்டில் உள்ள 46 சதவீத விவசாயிகள் இந்தத் தொழிலை தொடர விரும்பவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி செலவைக் குறைப்பது, உற்பத்தியை அதிகரிப்பது, அறுவடைக்குப் பிறகான மேலாண்மையை செவ்வனே செய்வது குறித்து விவசாயிகளை சிந்திக்கச் செய்ய வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த பண்ணையம், சூழலுக்கு உகந்த வேளாண்மை, நீடித்த வேளாண்மை முறைகள் தேவைப்படுகின்றன.
1960-களில் பஞ்சத்தில் சிக்கித் தவித்த இந்தியாவை அப்போது வேளாண் அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம், வேளாண்மைத் துறை செயலராக இருந்த பி.சிவராமன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய மூன்று தமிழர்கள்தான் காப்பாற்றினார்கள். இப்போதும் வேளாண்மைத் துறைக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு இடர்களை நீக்குவதற்கு தமிழகத்தில் இருந்து வேளாண் ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள், துறைத் தலைவர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com