கோவை அருகே நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

கோவை அருகே கல்குவாரி நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

கோவை அருகே கல்குவாரி நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
கோவை, மதுக்கரை, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் சிவபிரகாஷ் (10). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளி. இவரது மகன்கள் கார்த்தி (9), தினேஷ் (8). மூன்று சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே ஐந்து, நான்கு, மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவர்கள் அருகில் உள்ள மைதானத்துக்கு விளையாடச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மூவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினர் அப்பகுதி முழுவதும் தேடினர்.
அப்போது அவர்களது வீட்டில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கல்குவாரியில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மிதப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறுவர்களின் உறவினர்கள் அங்கு சென்றனர்.
இதுகுறித்து தீயணைப்புப் படை, மதுக்கரை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கல்குவாரியில் இறங்கி, மிதந்துகொண்டிருந்த சிவபிரகாஷ், தினேஷ் ஆகியோரது உடல்களை சுமார் அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்டனர்.
உயிரிழந்த மற்றொரு சிறுவனான கார்த்தியின் உடலைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர், பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறியதாவது:
கார்த்தியின் சடலம் விரைவில் மீட்கப்படும்.  சம்பவம் நடந்த கல்குவாரியைச் சுற்றி பாதுகாப்பில்லாததால் சிறுவர்கள் சுலபமாக உள்ளே நுழைந்து இதுபோன்ற விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கல்குவாரியைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து, எச்சரிக்கைப் பலகைகளும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com