அன்னூர் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி: எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

கோவை மாவட்டம், அன்னூர் - அவிநாசி சாலையில் உள்ள கத்தோலிக் சிரியன் வங்கியில் வெள்ளிக்கிழமை

கோவை மாவட்டம், அன்னூர் - அவிநாசி சாலையில் உள்ள கத்தோலிக் சிரியன் வங்கியில் வெள்ளிக்கிழமை இரவு கொள்ளை முயற்சியில்  ஈடுபட்ட கொள்ளையர்கள் எச்சரிக்கை மணி ஒலித்ததால்  கொள்ளை முயற்சியைக் கைவிட்டு தப்பி ஓடினர். 
அன்னூர் -அவிநாசி சாலையில் கத்தோலிக் சிரியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஊழியர்கள் வழக்கம் போல் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வங்கியைப் பூட்டிவிட்டுச் சென்றனர். இந் நிலையில் இந்த வங்கியில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் எச்சரிக்கை மணி ஒலிக்கும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகிலிருந்த பொதுமக்கள் அன்னூர் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் வங்கி மேலாளருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் வந்தவுடன் வங்கியைத்  திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்
அப்போது வங்கியின் பின்புற ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தின் கதவை உடைக்க முயற்சித்தபோது எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்கள்  கொள்ளை முயற்சியைக் கைவிட்டு தப்பி ஓடியுள்ளது தெரியவந்தது. 
கருமத்தம்பட்டி  துணைக் கண்காணிப்பாளர்  பாஸ்கரன் தலைமையில் அன்னூர் ஆய்வாளர் சண்முகம்  மேற்பார்வையில் காவல் துறையினர் அங்கு பதிவான கைரேகைகளைக் கொண்டும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். எச்சரிக்கை மணி ஒலித்ததால் வங்கியில் வைக்கபட்டிருந்த பல லட்சம் ரூபாய் மற்றும் நகைகள் தப்பின. 
இந்த சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் சுதிந்தர் அளித்த புகாரின் பேரில்அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com