தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண மத்தியக் குழுவினர் நியமனம்: ஆட்சியர் தகவல்

தண்ணீர் பற்றைக்குறைக்கு தீர்வு காண்பதற்காக குடிநீர் தட்டுப்பாடு உள்ள மாவட்டங்களில்  மத்திய அரசு சார்பில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பற்றைக்குறைக்கு தீர்வு காண்பதற்காக குடிநீர் தட்டுப்பாடு உள்ள மாவட்டங்களில்  மத்திய அரசு சார்பில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர் பாதுகாப்பு தொடர்பான மத்தியக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்து பேசியதாவது: நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 250க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தண்ணீர்ப் பிரச்னையை கையாள்வதற்காக மத்திய அரசு சார்பில் மாவட்டத்துக்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் இணைச் செயலர் நிலையில் உள்ள ஒரு அதிகாரி, பொறுப்பு அலுவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர். நீர் மேலாண்மை இயக்க திட்டத்தின் குழுவிலுள்ள அலுவலர்கள் கோவை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படுத்துதல், நீர் மேலாண்மையை உருவாக்குதல், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.  
பாரம்பரிய நீர் நிலைகளை புதுப்பித்தல், பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் உள்பட 5 குறிக்கோள்களை மையமாக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூலை 12) இக்குழு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நேரில் சென்று கள ஆய்வு செய்து,  நீர் மேலாண்மை, நீர் இருப்பு, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். 
நீர் மேலாண்மை இயக்கம் கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக ஜூலை 1 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக அக்டோபர் 2 முதல் நவம்பர் 30 வரையிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இதில்  பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்தல், சிறந்த நீர்ப் பாசனத் திட்டம் உருவாக்குதல், வறட்சிப் பகுதிகளை மேம்படுத்துதல், ஆழ்துளைக் கிணறுகளை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், காடுகளை உருவாக்குதல், மழைநீர் சேகரிப்புப் தொடர்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார். ஆலோசனைக் கூட்டத்தில் நீர்மேலாண்மை இயக்க திட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தீபானந் சாஹு, கொள்முதல் அமைச்சகத்தின் இயக்குநர் ஜெயசீலன், புவி அறிவியல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அஜீத் குமார் டங், நுகர்வோர், பாதுகாப்புத் துறை இணைச் செயலாளர் அபய்குமார், மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் விஞ்ஞானிகள் மினிசந்திரன், எம்.செந்தில்குமார், டி.கனகசுந்தர், வி.எஸ்.ஜோஷி, கே.அனிஷா, வினய்சந்திரன், மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் எஸ்.கே.தாஸ் மற்றும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com