சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: திமுக வலியுறுத்தல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.


கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வடகோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, மெட்டல் எம். மணி, அ.நந்தகுமார், ச.குப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கோவையில் கடந்த 8 ஆண்டுகளாக குடிநீர்த் திட்டம் தொடர்பாக உள் கட்டமைப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சரிவர செய்யாததால் மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் 15 நாள்களுக்கு ஒரு முறையும், சில இடங்களில் 20 நாள்களுக்கு ஒருமுறையுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மாநகரப் பகுதிகளில் குடிநீர்க் குழாய்கள் அடிக்கடி சேதமடைவதால் பெருமளவில் நீர் வீணாகி சாலைகளில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் விநியோக பணிகளை நிர்வகித்து வரும் சூயஸ் நிறுவனப் பணியாளர்கள் முறையான குடிநீர் விநியோகம்,  உடைப்பு ஏற்படும் குடிநீர்க் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யும் பணிகளில் குளறுபடி செய்து வருகின்றனர்.
எனவே, சரியான முறையில் பராமரிப்புப் பணிகளை செய்யாத சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மாநகரில் அனைத்துப் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மாநகர பகுதிகளில் உள்ள நொய்யல் ஆறு பாயும் வழித்தடங்கள், சங்கனூர் ஓடை என பல்வேறு நீர்வழித் தடங்கள் புதர் மண்டியும், பராமரிக்கப்படாமலும் உள்ளன. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மழைநீர் வடிகால்களில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்டத் துறை இணைச் செயலர் கே.எம்.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், மகுடபதி, தீபா, பகுதிச் செயலர்கள், வட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com