கோவையில் செப்டம்பர் 5 இல் அஞ்சல் தலை கண்காட்சி

கோவை மண்டல அஞ்சல் துறை சார்பில் மாவட்ட அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை மண்டல அஞ்சல் துறை சார்பில் மாவட்ட அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஷியூலி பர்மன், அஞ்சல் சேவைகள் இயக்குநர் கே.ராமசாமி, கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாகரே ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் அண்மையில் கூறியதாவது:
அஞ்சல் தலை சேகரிப்பு என்பது மிகச்சிறந்த பொழுதுபோக்காக மட்டுமின்றி நாட்டின் வரலாறு, கலாசாரம் போன்றவற்றை அறிந்து கொள்ளவும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் உதவும் கலையாக உள்ளது. மற்ற இடங்களைக் காட்டிலும் கோவையில் அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகளிடையே அஞ்சல் தலை சேகரிப்புப் பழக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் கோவை மண்டல அஞ்சல் துறை சார்பில் கோவையில் மாவட்ட அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் நினைவாக, "சாந்திபெக்ஸ் 2019' என்ற பெயரில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. 
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதைத் தவிர அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வம் கொண்ட ஏராளமானவர்கள் பங்கேற்று தங்களிடம் உள்ள அரிய அஞ்சல் தலைகளை காட்சிப்படுத்த உள்ளனர்.
கோவையைச் சேர்ந்த பொதுமக்கள், அஞ்சல் தலை ஆர்வலர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்காக ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் தங்களது பெயர், விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கண்காட்சியை விளம்பரப்படுத்துவதற்காக மாணவ-மாணவிகளிடையே பல்வேறு போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கண்காட்சியில் அஞ்சல் தலைகளை சிறப்பாக காட்சிப்படுத்துபவர்களுக்கு விருதுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
இதைத் தொடர்ந்து ஷியூலி பர்மன் செய்தியாளர்களிடம் பேசும்போது, அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் மேற்கு மண்டலத்தில் 50 சதவீத தற்காலிக காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அஞ்சல் துறை ஆயுள் காப்பீடுத் திட்டத்திலும், ஒட்டு மொத்தமாகவும் அஞ்சல் துறையின் வருவாய் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. மேற்கு மண்டலத்தில் பார்சல் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் அஞ்சல் அட்டைகள் பற்றாக்குறை தற்காலிகமாக ஏற்பட்டன. பின்னர் அவை சரி செய்யப்பட்டுவிட்டன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com