பக்தர்கள் வசதிக்காக மருதமலை கோயிலில் மின் தூக்கி அமைக்க ஆய்வு

மருதமலை முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி, பேட்டரி வாகனங்கள்

மருதமலை முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி, பேட்டரி வாகனங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முதற்கட்ட ஆய்வை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மருதமலை முருகன் கோயில். இங்கு உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். 
ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி சுற்றுலாத் தலமாகவும் உள்ளதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 
தினமும் சராசரியாக 5 ஆயிரம் பக்தர்களும், வார இறுதி, விடுமுறை நாட்களில் 25 ஆயிரம் பக்தர்களும், கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாள்களில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களும் இங்கு வருகின்றனர். 
தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த தினங்களில் 2 லட்சம் பக்தர்கள் வரை வருகை தருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.  
அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலை அடைய 600க்கும் அதிகமான படிகள் உள்ளன. தவிர வாகனங்கள் மூலமும் மலைக் கோயிலுக்குச் செல்லலாம். பக்தர்களின் வசதிக்காக மலைக் கோயிலுக்குச் செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. 
இதற்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் மூலம் சென்றாலும் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து 140 படிகளைக் கடந்தே முருகனை தரிசிக்க முடியும். 
இதனால் வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக சிரத்தையோடு வரும் வயதான பக்தர்கள் 140 படிகளைக் கடந்த செல்வதற்குள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். 
சில நேரங்களில் படிகளில் ஏற முடியாமல் இவர்கள் திரும்பும் நிலையும் ஏற்படுகிறது. இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பேட்டரி வாகனங்கள், மின் தூக்கி, ரோப் கார் போன்றவற்றை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மருதமலை கோயிலில் மின் தூக்கி, பேட்டரி வாகனங்கள் அமைப்பது தொடர்பாக முதல்கட்ட ஆய்வை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டுள்ளது. மின் தூக்கி அமைக்கப்பட்டால் முருகனை சந்திக்க சிரமப்பட வேண்டியதில்லை என பக்தர்களும் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து மருதமலை கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது: 
பக்தர்களின் வசதிக்காக மின்தூக்கி அமைப்பது குறித்த முதற்கட்ட ஆய்வு  அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. 
அலுவலக அறையில் இருந்து மின்தூக்கி அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், பேட்டரி வாகனங்கள் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. 
தற்போது மண் மாதிரிகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. 
தொடர்ந்து ஆய்வு செய்து சாத்தியக் கூறுகளுக்கேற்ப மின்தூக்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com