ரூ.10.88 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு

கோவை, கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4ஆம் அணி காவலர்களுக்காக ரூ. 10.88 கோடியில் கட்டப்பட்ட 

கோவை, கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4ஆம் அணி காவலர்களுக்காக ரூ. 10.88 கோடியில் கட்டப்பட்ட 137 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். 
கோவை, கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4ஆம் அணி 1962 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 52 ஏக்கரில் அமைந்துள்ள இந்த அணியில் 7 நிறுமங்கள், 4 குழுங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 42 காவல் அதிகாரிகள், 928 காவலர்கள் மற்றும்  26 அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் காவலர்களுக்கு ரூ. 10.88 கோடியில் 137 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் வரவேற்பு அறை, இரண்டு படுக்கை அறைகள், சமையலறை மற்றும் நவீன வசதிகளுடன் இரண்டு கழிவறையுடன் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 
கட்டுமான பணிகள் முடிந்து திறப்புவிழாவுக்கு தயார் நிலையில் இருந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசியதாவது: 
கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த சில ஆண்டுகளில் செய்துள்ளோம்.  நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை உள்பட பல இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அத்துடன் சாலை மேம்பாட்டு பணிகளும் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமம், நகரம் என அனைத்துப் பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளை விரைந்து பிடித்தல் என தமிழக காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவலர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரோந்துப் பணிகளுக்கு புதிய வாகனங்கள் வழங்குதல் உள்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி இன்று திறக்கப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல் அரசு அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள் மற்றும்  பொதுமக்கள் உள்பட அனைவரையும்  கருத்தில்கொண்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழக கண்காணிப்பு பொறியாளர் எ.ரவிசந்திரன், செயற்பொறியாளர் எஸ்.வி.சேகர் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com