வால்பாறையில் மழை: ஆறுகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 14th June 2019 08:52 AM | Last Updated : 14th June 2019 08:52 AM | அ+அ அ- |

வால்பாறை பகுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியுள்ளதால் ஆறுகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறை பகுதியில் கடும் வறட்சி நிலவியதால் அனைத்து ஆறுகளும் வறண்டன. நீர்வரத்து இன்றி வால்பாறைய அடுத்த 160 அடி கொள்ளளவு கொண்ட சோயாறு அணையின் நீர்மட்டம் 2 அடியாகக் குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் உருவானது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இப்பகுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): வால்பாறை 10, சோலையாறு 25, லோயர் நீராறு 18, அப்பர் நீராறு 18.
சோலையாறு அணைக்கு விநாடிக்கு 325 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 3.75 அடியாக உள்ளது.