பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்கின

கோவை மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

கோவை மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கோவை, பேரூர், எஸ்.எஸ்.குளம், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை வருவாய் மாவட்டத்தில் 35,723 மாணவ-மாணவிகள் நேரடியாகவும், 704 மாணவ-மாணவிகள் தனித்தேர்வர்களாகவும் எழுதுகின்றனர். பள்ளிகள் மூலம் தேர்வு எழுதுபவர்களுக்கு 116 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 4 தேர்வு மையங்களும் என மொத்தம் 120 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 14 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 தேர்வுகளைக் கண்காணிப்பதற்காக தேர்வுத் துறை இணை இயக்குநர் உள்ளிட்ட 11 ஆய்வு அலுவலர்களும், 32 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 126 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 140 துறை அலுவலர்கள், 250 பறக்கும் படையினர், 22 வழித்தட அலுவலர்கள், 2,820 அறைக் கண்காணிப்பாளர்கள், 625 அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 4,026 அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 மொழிப் பாடத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், தமிழ், பிரெஞ்ச், சம்ஸ்கிருதம், மலையாளம், ஜெர்மன், ஹிந்தி ஆகியத் தேர்வுகளை மாணவ-மாணவிகள் எழுதினர். முதல் நாளில் 1,678 பள்ளி மாணவர்களும், 19 தனித் தேர்வர்களும் தேர்வுக்கு வரவில்லை. தமிழ்ப் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களில் சிலவும், பெரு வினா ஒன்றும் சற்று கடினமானதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
 இதற்கிடையே, கோவை ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் பள்ளித் தேர்வு மையத்துக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தேர்வு அறைகளில் ஆய்வு மேற்கொண்டார். முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com