வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.ஒரு லட்சம் மோசடி: தம்பதி மீது புகார்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.ஒரு லட்சம் மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த தம்பதி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.ஒரு லட்சம் மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது. 
 இது குறித்து மதுரை மாவட்டம், தத்தனேரி களத்துப் பொட்டல் பகுதியைச் சேர்ந்த சே.ஹெலன் பாக்கிய தீபம், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
 கோவையைச் சேர்ந்த பிரியங்கா, அவரது கணவர் விஜயபாரத் ஆகியோர் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆள் அனுப்புவதாக விளம்பரம் செய்திருந்தனர். இதையடுத்து, எனது கணவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்குவதற்காக அவர்களை அணுகினோம்.
 அப்போது, கோவை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. பின்னர் எனது கணவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக எனது நகைகளை அடகு வைத்து என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து நான்கு தவணையாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 500 ஐ, பிரியங்காவின் வங்கிக் கணக்கில் செலுத்தினேன்.
 பின்னர் சில நாள்கள் கழித்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு எனது கணவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான நுழைவு இசைவுச் சீட்டை அனுப்பி  வைத்தனர். இணையதளத்தில் அதைச் சரிபார்க்கும்போது, அது போலியான நுழைவு இசைவுச் சீட்டு என்பது தெரியவந்தது.
 இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தனர். உங்கள் கணவரை வெளிநாட்டுக்கு அனுப்புங்கள் எனக் கூறினர். இதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம். மேலும், பணத்தைத் திரும்பத் தருமாறு கூறினோம்.
 சுமார் 6 மாதங்கள் கழித்து ரூ.22 ஆயிரத்தை எனது கணக்குக்கு பிரியங்கா அனுப்பினார். மீதித் தொகை குறித்து கேட்டபோது, அதைத் தர மறுத்து எங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே எங்களிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 500 ஐ மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com