சாலையோரக் கடைகளுக்கு ஒரே இடத்தில் வளாகம்:  ரூ. 50 கோடிக்குத் திட்டம் தயாரிப்பு

கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோரக் கடைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் செயல்படும் வகையில்

கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோரக் கடைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் செயல்படும் வகையில் வளாகம் அமைக்க ரூ.50 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சாலைகளில் அதிக அளவில் சாலையோரக் கடைகள் உள்ளன. இதில், மாலை நேரங்களில் துரித உணவகங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. சாலையோர வியாபாரிகளை ஒழுங்குப்படுத்தும் விதமாக தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  கடந்த ஆண்டு மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர வியாபாரிகளை நேரடியாகச் சந்தித்து ஆய்வு செய்து மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டது.  இந்நிலையில், சாலையோர வியாபாரிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ரூ.50 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சியில் 6 ஆயிரத்து 163 பேருக்கு சாலையோர வியாபாரிகளுக்கான பயோமெட்ரிக் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களை ஒருங்கிணைத்து ஒரே பகுதியில் விற்பனை மேற்கொள்ளும் வகையில் ரூ. 50 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்பதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் குறிப்பிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும். உணவகங்கள், துணிக் கடைகள், பூக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு எனத் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்படும். 
இங்கு, தேவையான தண்ணீர் வசதி, கழிப்பிடங்கள், பொருள்கள் பாதுகாப்பு அறைகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும். 
கடைகளைக் கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள், போக்குவரத்து போலீஸார் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படும். 
மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ள வசதியாக இருக்கும். கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுவதால் வீதி, வீதியாக அலைந்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பொது மக்களுக்கும் சாலையோரக் கடைகளில் சுகாதாரத்துடன், தரமான பொருள்கள் கிடைக்கும், சுகாதாரமும் பாதுகாக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com